மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

 ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

சேலம் அரசு மருத்துவமனையில் இன்று(டிசம்பர் 7) சம்பள உயர்வு கேட்டு ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டதால் நோயாளிகள் தவிப்புக்கு உள்ளாகினார்கள்.

சேலம் அரசு மருத்துவமனையில் பத்மாவதி என்ற தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் 400க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அரசு மருத்துவமனையில் காவலாளி, துப்புரவு மற்றும் உதவியாளர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு அந்த நிறுவன மூலம் மாதம் 5,400 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களாகச் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை சம்பளம் உயர்த்தி வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் 400க்கும் மேற்பட்டோர் இன்று மருத்துவமனையின் முன்புள்ள பகுதியில் திரண்டார்கள். பின்னர் மருத்துவமனையின் நுழைவு வாயில் அருகே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைப்பற்றிய தகவலறிந்த தனியார் நிறுவன மேலாளர், போலீஸ் உதவி கமி‌ஷனர் அன்பு மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் இதேபோல் பணிபுரியும் ஊழியர்களுக்கு 8,100 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. ஆனால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணிபுரியும் எங்களுக்கு 5,400 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. விடுமுறை இல்லாமல் கூடுதல் நேரம் வேலை பார்த்துவருகிறோம். அசுத்தமான பணிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.

குறைந்த சம்பளம் வழங்குவதால் குடும்பத்தை நடத்த முடியாமல் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே உடனே சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon