மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

மழைக்கு வாய்ப்பு!

மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நேற்று( டிசம்பர் 06) காலை காற்றழுத்த மண்டலமாக மாறியது. இதனால் முதலில் இது புயல் சின்னமாக மாறி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என்றும் சென்னை மற்றும் வட தமிழகத்தில் மிகப் பலத்த மழைபெய்யும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றின் வேகம்- சுழற்சி காரணமாக அது புயல் சின்னமாக உருவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இது குறித்து வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று(டிசம்பர் 07) செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “வங்கக் கடலில் மசூலிப்பட்டினத்தில் இருந்து 875 கி.மீ. தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த மண்டலமானது வடக்குவடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 9 ஆம் தேதி வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்பகுதியை நோக்கி நகரக் கூடும். இதனால் வட தமிழகம் மற்றும் ஆந்திரா மீனவர்கள் வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

மேலும் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் எண்ணூர், தூத்துக்குடி, நாகை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு 2 நாட்ளுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்திற்கு மழை பாதிப்பு எதுவும் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் சிவகிரியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon