மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

தேர்தல் அலுவலரை மிரட்டினோமா?

தேர்தல் அலுவலரை மிரட்டினோமா?

மிரட்டியதால்தான் எனது வேட்புமனுவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்ததாக தேர்தல் அலுவலர் கூறியுள்ளார், இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளோம் என்று நடிகர் விஷால் ஆவேசமாக கூறியுள்ளார்.

ஆர்.கே.நகரில் போட்டியிடுவதற்காக விஷால் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில், கையெழுத்திட்டிருந்த இருவர் தாங்கள் கையெழுத்திடவில்லை என்று பின்வாங்கினர். இதனால் விஷால் வேட்புமனு கடந்த 5ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது.

ஆனால் இருவரும் மிரட்டப்பட்டதாக தேர்தல் அலுவலரிடம் ஆடியோ ஒன்றை தாக்கல் செய்து முறையிட்ட விஷால், வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் ஊடகங்களில் தெரிவித்தார். ஆனால் சிறிது நேரத்தில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அவர், நேற்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகாரும் அளித்தார். இதையடுத்து விஷாலுக்கு ஒரு வாய்ப்பு வழங்க தேர்தல் ஆணையத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும். அதன்படி, வேட்புமனுவில் முன்மொழிந்த இரு நபர்களும், இன்று பிற்பகல் 3மணிக்குள் நேரில் வந்து முறையிட்டால் விஷால் வேட்புமனு ஏற்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பேசிய விஷால், "முன்மொழிந்த சுமதி, தீபன் இருவரையும் தற்போது தொடர்புகொள்ள முடியவில்லை, அவர்களை கண்டுபிடித்துத் தர வேண்டும். நான் தேர்தலில் போட்டியிடுவதைவிட அவர்களின் பாதுகாப்பே எனக்கு முக்கியம். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிப்பேன்" என்று கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமியை, நடிகர் விஷால் சந்தித்துப் பேசினார். வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த விஷால், "முன்மொழிந்த இருவரையும் ஆஜர்படுத்தினால் வேட்புமனுவை ஏற்றுக்கொள்வோம் என்று தேர்தல் ஆணையம் கூறியதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியது. இதனால் இங்கு வந்தேன், ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி, தாங்கள் அவ்வாறு கூறவில்லை"என்று கூறிவிட்டார்.

அவரிடம் நான், "ஏன் எனது மனுவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்து பின்னர் நிராகரித்தீர்கள் என்று கேட்டேன்?. அதற்கு, நாங்கள் அச்சுறுத்தியதால்தான் ஏற்றுக்கொண்டோம் என்று சொல்கிறார். எங்கள் தரப்பிலிருந்து அவரிடம் பேசிய வீடியோ காட்சியே உள்ளது. அதுவும் அரசு காமிராவிலேயே பதிவாகியுள்ளது. அவரிடம் நாங்கள் கெஞ்சிக் கேட்டோம், இரு கையெழுத்தும் ஒன்றுதான் என்றும் கூறினோம், அதன்பிறகு அவரே மைக்கை எடுத்து என்னுடைய வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவித்தார், எனக்கு வாழ்த்துக்களும் தெரிவித்தார். ஆனால் தற்போது நாங்கள் மிரட்டினோம் என்கிறார். எனவே இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளேன். நாங்கள் மிரட்டியதாக ஒரு அரசு அதிகாரி சொல்கிறார். இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.

இந்த நிலையில் 3 மணியுடன் வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான நேரம் முடிந்த நிலையில், ஆர்.கே.நகர் இறுதி வேட்பாளர் பட்டியல் பிற்பகல் 3.45 மணியளவில் வெளியிடப்பட்டது. அதிலுள்ளபடி விஷால், தீபா உள்பட 73பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14 பேர் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றதால், 58பேர் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஒருவர் மட்டுமே பெண் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon