மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

ஜெருசலேம்: பற்றி எரியும் நெருப்பு

ஜெருசலேம்:  பற்றி எரியும் நெருப்பு

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது சர்வதேச அளவில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. சபை நாளைக் கூடவுள்ளது.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நேற்று டிசம்பர் 6 பேசிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கு இதுவே நேரம். இது நீண்ட காலமாக நிலுவையில் இருந்த விஷயம். இந்நகரம் மூன்று முக்கிய மதங்களின் இதயமாக இருக்கிறது. இனிமேல், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இஸ்ரேலின் இதயமாகவும் இருக்கும்” என்று அறிவித்தார். டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்றும் கூறியுள்ளார்.

யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித பூமியாக ஜெருசலேம் இருந்துவருகிறது. பாலஸ்தீனத்தின் ஒருபகுதியாகக் கருதப்படும் ஜெருசலேமை கடந்த 1967ஆம் ஆண்டு நடைபெற்ற போர் மூலம் இஸ்ரேல் கைப்பற்றியது. பின்னர் அதனைத் தனது நாட்டின் தலைநகராகவும் அறிவித்தது. இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுமே ஜெருசலேமைத் தங்களின் தலைநகராகக் கூறிவருகின்றபோதும் உலக நாடுகள் இதனை இன்றுவரை அங்கீகரிக்காமல் உள்ளன. சர்வதேசச் சட்ட திட்டங்களின்படி ஆக்கிரமிப்பு நகரமாகவே ஜெருசலேம் கருதப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெருசலேமில் அமெரிக்கத் தூதரகம் அமைக்கப்படும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். இதற்கு அப்போதே எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தான் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு இஸ்ரேல் வரவேற்பு தெரிவித்துள்ளது. ஏனைய சர்வதேச நாடுகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த அறிவிப்பு பொறுப்பற்றது, நியாயமற்றது என்று சவுதி அரேபியா விமர்சித்துள்ளது. அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்கள் இடையேயான பிரச்சினையில் எரிபொருள் ஊற்றுவது போன்றது என்று ஜோர்டன் குற்றஞ்சாட்டியுள்ளது.

ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பை அங்கீகரிக்கவில்லை என்று பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஜெர்மனியும் இதே முடிவில்தான் உள்ளது. இத்தாலி, பிரிட்டன், குவைத், எகிப்தி, லெபனான், மாலத்தீவு, மலேசியா, பஹ்ரைன், துருக்கி உட்பட பல்வேறு நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளும் ட்ரம்பின் இந்த அறிவிப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஹமாஸ் போன்ற கிளர்ச்சி அமைப்புகள் இதற்கு எதிராகப் போராட்டம் தொடங்கத் திட்டமிட்டுள்ளன. பாலஸ்தீனியர்கள் காசா உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆங்காங்கே ட்ரம்பின் புகைப்படங்கள் எரிக்கப்பட்டுவருகின்றன. துருக்கி நாட்டிலும் ட்ரம்புக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

இதற்கிடையே, இஸ்ரேலின் ஒருபகுதி தான் என ஜெருசலேம் நகருக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனவே இந்தியாவும் தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்ரமணியன் சாமி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. சபை நாளை (டிசம்பர் 8) கூடுகிறது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon