மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

புதிய ரூ.50, 200 நோட்டுகள்: கருத்து தெரிவிக்க உத்தரவு!

புதிய ரூ.50, 200 நோட்டுகள்: கருத்து தெரிவிக்க உத்தரவு!

புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளைக் கண்டறிவதில் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு உள்ள சிரமத்தை எளிதாக்க என்ன செய்யலாம் என்று கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மூன்று வழக்கறிஞர்கள், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு, உள்ளிட்ட அமைப்புகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். புதிதாக வந்த 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளைப் பார்வைக் குறைபாடுள்ளவர்கள் அடையாளம் கண்டு கொள்வதில் சிரமப்படுகின்றனர். அதை அவர்களுக்கு எளிதான முறையில் மாற்றித் தர வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு நேற்று (டிசம்பர் 6) நீதிபதிகள் கீதா மித்தல், சி.ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. புதிதாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் பார்வையற்றோர் புரிந்துகொள்ளும் வகையில் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. அதற்கேற்ப ரூபாய் நோட்டில் அடையாளக் குறியீடு இருக்கிறதா என்பதை ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஆராய வேண்டும். இது தொடர்பாகப் பார்வையற்றோர் தொடர்பான நிபுணர்களை அணுகி உறுதி செய்ய வேண்டும். ஏற்கெனவே இருந்த அளவின்படி புதிய நோட்டை அரசு ஏன் அச்சிடவில்லை என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பினர்.

இது குறித்து மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கருத்து தெரிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon