மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

நிவாரண முகாம்களில் வசதி இல்லை?

நிவாரண முகாம்களில் வசதி இல்லை?

கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இன்று (டிசம்பர் 7) தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் சந்தித்தார். அதன்பிறகு, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, ஓகி புயலினால் குமரி மாவட்டம் பாதிக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் பேசியதாகத் தெரிவித்தார்.

“நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம், தோவாளை பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளேன். இன்று திருவட்டார், குலசேகரம் பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளேன். பல பகுதிகளில் இன்னும் மரங்கள் முழுமையாக அகற்றப்படவில்லை. வீடுகள் மீதும் மரங்கள் விழுந்து கிடக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில், சரியாக முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை.

தற்போது குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக, கேரள மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் மகாராஷ்டிரா, குஜராத், லட்சத்தீவுகளில் கரை சேர்ந்துள்ளனர். அவர்கள் கடல் மார்க்கமாக ஊர் திரும்ப எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு முயற்சி நடந்து வருகிறது.

புயலால் இறந்தவர்களுக்கு கேரளாவில் அரசு உதவி வழங்குவதுபோல, தமிழக அரசும் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும். இழப்பீடுகளை கணக்கிடும்போது, புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின், மீனவ மக்களின் மனநிலையை புரிந்து செயல்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon