மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

ஹிட் அடித்த ஹலோ டிரெய்லர்!

ஹிட் அடித்த ஹலோ டிரெய்லர்!

தெலுங்கில் நாகார்ஜுனா தயாரிப்பில் அவரது மகன் அகில் அகினேனி நடிக்கும் ஹலோ படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழில் அலை, யாவரும் நலம், 24 ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார் தெலுங்கிலும் படங்கள் இயக்கிவருகிறார். இவரது இயக்கத்தில் வெளியான மனம் என்ற தெலுங்குப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அகில் அகினேனி நடிப்பில் இவர் இயக்கிவரும் ஹலோ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி இந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். டிசம்பர் 22ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நேற்று (டிசம்பர் 6) ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த படத்தின் தயாரிப்பாளரான நாகார்ஜுனா, “ஹலோ திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. நான்கு நாள்களில் டிரெய்லர் 8 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.

படத்தின் கதைச் சுருக்கத்தைக் கூறிய அவர், “ஒரு சிறுவனும் சிறுமியும் மிகுந்த நட்புடன் பழகுகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிகிறார்கள். சிறுமி தனது போன் நம்பரைச் சிறுவனிடம் தருகிறாள். அவர்கள் திரும்ப சந்திக்கும் வரை இருவரும் ஒவ்வொரு நாளும் போனில் பேசுகின்றனர். அதனாலே படத்தின் தலைப்பு ஹலோ என்று வைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “நான் கேட்டுக்கொண்டதையடுத்து 2019ஆம் ஆண்டின் துவக்கத்தில் எனது மூத்த மகன் நாக சைதன்யாவை வைத்து விக்ரம் குமார் படம் இயக்குவதாக உறுதி கூறியுள்ளார். ஹலோ படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 10ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அந்த நிகழ்வில் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை அகில் பாடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon