மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

ஆதார் எண் இணைப்பதற்குக் கால அவகாசம் நீட்டிப்பு!

ஆதார் எண் இணைப்பதற்குக் கால அவகாசம் நீட்டிப்பு!

அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக பான் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை 2018 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பான் கார்டு, வங்கி கணக்கு, பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்ட், இன்சூரன்ஸ் பாலிசிகள், தபால் நிலையத் திட்டங்கள், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, போன்ற மத்திய அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காகப் பயனளர்கள் தங்கள் ஆதார் எண்ணை, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் அனைத்தும் மொத்தமாக உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டுவருகின்றன. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று (டிசம்பர் 07) விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபால் ஆஜராகி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில் "மொத்தம் 139 சேவைகள் மற்றும் திட்டங்களுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு 2018 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அரசு டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கை வெளியிடும். எனினும் மொபைல் எண்ணுடன் ஆதாரை, 2018 பிப்ரவரி 6ஆம் தேதிக்கு முன் இணைக்க வேண்டும் என்ற காலக்கெடுவில் மாற்றம் இல்லை. இதுவரை ஆதார் எண் பெறாதவர்களுக்கு மொபைல் போனுடன் ஆதார் எண் இணைப்பதற்குக் காலக்கெடு 2018ஆம் மார்ச் 31ஆம் தேதி வரை வழங்கப்படும்" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கும் உத்தரவுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon