மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

தனியார் பேருந்தில் படம், பாட்டுக்குத் தடை!

தனியார் பேருந்தில் படம், பாட்டுக்குத் தடை!

தமிழகத்தில் 2018 ஜனவரி 1ஆம் தேதி முதல், தனியார் பேருந்துகளில் பாடல் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பக் கூடாது என இன்று (டிசம்பர் 7) அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகளில் இருந்து தொலைக்காட்சி பார்க்கும் வசதி நீக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தனியார் பேருந்துகளிலும் தொலைக்காட்சிகளில் படம் பார்ப்பது, பாடல்களைக் கேட்பது போன்ற வசதிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவினருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சுமார் 7,000 பேருந்துகளில் இருந்து தொலைக்காட்சிகள் நீக்கப்படவுள்ளன. இது தொடர்பாக அனைத்துப் பேருந்து உரிமையாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாகத் தனியார் போக்குவரத்துத் துறையில் திருட்டுவிசிடி ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. ஆனால் அதற்கான முதல் நடவடிக்கை 2016ஆம் ஆண்டு மே மாதம் எடுக்கப்பட்டது,

2016ஆம் ஆண்டு மே மாதம், பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தில் விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் ஒளிபரப்பானது. அதைப் பார்த்த பயணிகளில் ஒருவர் நடிகர் விஷாலை செல்பேசியில் தொடர்புகொண்டு கூறியுள்ளார். இந்த செய்தியை உறுதி செய்யும் வகையில் பேருந்தில் ‘தெறி’ படம் ஓடுவதை செல்பேசியில் வீடியோ எடுத்து அனுப்பு மாறு விஷால் கூறியுள்ளார். அந்த பயணியும் வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, திருட்டு விசிடி தடுப்பு சிறப்பு ஆய்வாளர் ஜெயலட்சுமியின் ஆணைப்படி ஆய்வாளர்கள் நந்தகுமார் மற்றும் மகேந்திரன் இருவரும் மதுரவாயில் அருகே அந்த பேருந்தை நிறுத்தி ஓட்டுநரைக் கைது செய்தனர். ஒரு வாரத்துக்குப் பின்னர், திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த பேருந்தில் நடிகர் சூரியாவின் 24 படம் திரையிடப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பேருந்து சென்னை வந்ததும், பேருந்தின் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து, நடிகர் சங்கம் சென்னை தனியார் பேருந்து ஆபரேட்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், “சட்டவிரோதமாக புதிய திரைப்படங்களை ஒளிபரப்பினால், போலீஸ் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என எச்சரிக்கப்பட்டிருந்தது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon