மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

நடராஜனுக்குப் பிடிவாரண்ட்!

நடராஜனுக்குப் பிடிவாரண்ட்!

சொகுசுக் கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

சொகுசுக் கார் இறக்குமதி மோசடி தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு நடராஜன், பாஸ்கரன் ஆகியோருக்கு விலக்கு அளிப்பதாக டிசம்பர் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அவர்கள் நேரில் ஆஜராகவில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறி நடராஜன் உட்பட 4 பேருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சிபிஐ நீதிமன்றம் இன்று (டிசம்பர் 7) பிறப்பித்துள்ளது.

வழக்கின் பின்னணி

நடராஜன் 1994ஆம் ஆண்டு, லெக்சஸ் என்ற சொகுசுக் காரை லண்டனிலிருந்து இறக்குமதி செய்தார். ஏற்கனவே பயன்படுத்திய பழைய கார் எனக் கூறி இறக்குமதி செய்ததால் ரூ.1 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்ததாக நடராஜன், அவரது உறவினர் வி.என். பாஸ்கர் உட்பட நான்கு பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் பொருளாதாரச் சிறப்பு நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு நடராஜன் உட்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடராஜன் உட்பட நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

எனினும், சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்வதாகக் கடந்த நவம்பர் 17ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உடல்நிலையைக் காரணம் காட்டி நீதிமன்றத்தில் சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடராஜன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 4ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. பாஸ்கரன் தரப்பில் தனது அபராதத் தொகையைச் செலுத்திவிட்டதால் இந்தத் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு, உடல்நிலை காரணமாக, நடராஜன் தாற்காலிகமாக சிறைக்குச் செல்லத் தேவையில்லை என்றும், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைவதிலிருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டது. பாஸ்கரனுக்கு விலக்கு அளிக்கப்பட்டதுடன் இந்த மனு பின்னர் விரிவான விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon