மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

அகமது பட்டேல் முதல்வர் வேட்பாளர்?

அகமது பட்டேல் முதல்வர் வேட்பாளர்?

குஜராத் முதல் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (டிசம்பர் 7) முடிவடையும் நிலையில், அகமது பட்டேலை காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக அறிவித்து ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 9 மற்றும் 14ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. முதல் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம், இன்றோடு முடிவடைந்தது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி என இரண்டு பெருந்தலைகள் குஜராத் பிரச்சாரத்தில் களமிறங்கியதால், இரண்டு வாரங்களாக குஜராத்தில் அனல் பறக்கிறது. இருவரும் மாறிமாறி கேள்விகள் கேட்டுக்கொண்டும், பதில்கள் சொல்லிக்கொண்டும் இருப்பதால், ஒவ்வொரு நாளும் ஹாட் நியூஸ் எனும் நிலைமையே தொடர்கிறது. பிரச்சாரம் முடிவடைந்த பின்பும், இந்த வழக்கம் நின்றபாடில்லை.

இந்த தேர்தலில் நிதின் பட்டேல் மற்றும் விஜய் ருபானியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறது பாஜக. ஆனால், காங்கிரஸ் கட்சியில் முதல்வர் வேட்பாளர் என யாரும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று சூரத் வட்டாரத்தில் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை தழைத்தோங்க, காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அகமதுபட்டேல் மாநில முதல்வராக, இஸ்லாமியர்கள் காங்கிரஸுக்கும் வாக்களிக்க வேண்டும் என்று இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, அகமது பட்டேல் மற்றும் ராகுல் காந்தியின் புகைப்படங்களும் இந்த போஸ்டரில் இடம்பிடித்துள்ளது. சமூக வலைதளங்களில் இது வேகமாகப் பரவி வருவதால், காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே பூசல் முளைத்துள்ளது.

இதுகுறித்துப் பேசியிருக்கும் அகமது பட்டேல், போலியான போஸ்டர்களைக் கொண்டு வதந்தியைப் பரப்புவது பாஜகவின் விரக்தியைக் காட்டுகிறது என்றிருக்கிறார். ”நான் ஒருபோதும் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் கிடையாது. தோல்வி பயத்தில் அவர்கள் மோசமான தந்திரங்களில் இறங்குகின்றனர்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஆனால், காங்கிரஸின் குற்றச்சாட்டை பாஜகவினர் வன்மையாக மறுத்துள்ளனர். “அவர்களே போஸ்டரை ஒட்டிவிட்டு, சமூக வலைதளங்களில் பரவவிட்டு, இப்போது எங்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். இதேபோல, போலி வேட்பாளர்கள் பட்டியல் இணையத்தில் பரவியபோதும் எங்களை குற்றம்சாட்டினர். இதுபோன்ற எந்த அடிப்படையுமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதே காங்கிரஸின் வேலையாகிவிட்டது” என்று தெரிவித்திருக்கிறார் பாஜகவின் செய்தித்தொடர்பாளர் பரத் பாண்டியா.

பாஜகதான் இந்த போஸ்டர் விவகாரத்திற்குப் பின்னால் உள்ளது என்ற குற்றச்சாட்டை காங்கிரஸும், காங்கிரஸே இதைச்செய்துவிட்டு எங்கள் மீது குற்றம் சுமத்துகிறது என்று பாஜகவும் பதிலளித்துள்ளது. பிரச்சாரம் முடிவடைந்தபின்பும், இரு தரப்புக்குமான முட்டல்களும் மோதல்களும் கொஞ்சமும் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon