மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

போக்குவரத்து துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு!

போக்குவரத்து துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு!

தமிழகம் முழுவதுமுள்ள அரசு பேருந்துகளில் முரண்பட்ட கட்டணம் வசூலிப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில் போக்குவரத்து துறை அதிகாரிகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுகல்லை சேர்ந்த நல்லையன் பெருமாள் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு விதமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரே ஊருக்கு செல்லும் பல பேருந்துகளில் கட்டணம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சென்னையில் மூன்று ரூபாய்க்குக் கூட டிக்கெட் வாங்கப்படுகிறது.ஆனால் திண்டுக்கல் உள்ளிட்ட பிற ஊர்களில் அரசு பேருந்துகளில் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை வசூலிக்க அரசு ஆணை எதுவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கும் அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை. அதனால், எந்த அரசு ஆணைப்படி டிக்கெட் வசூலிக்கப்படுகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும். மேலும், ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு இன்று(டிசம்பர் 7) நீதிபதிகள் வேணுகோபால், தாரணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு மீதான விசாரணையை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon