மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

103ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய மூதாட்டி!

103ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய மூதாட்டி!

திருப்பூரில் 103 வயதை எட்டிய மூதாட்டி ஒருவர் தனது 5 தலைமுறையினருடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் ஆணைப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமாத்தாள். இவருக்கு நேற்று (டிசம்பர் 06) 102 வயது முடிந்து 103ஆவது வயது தொடங்கியது. ராமாத்தாளின் கணவர் ராமசாமி, ராமாத்தாளை விட இரண்டு வயது சிறியவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். ராமாத்தாளின் 4 பெண்கள், 11 பேரப் பிள்ளைகள், 12 கொள்ளுப் பேரப் பிள்ளைகள், எள்ளுப் பேரப் பிள்ளைகள் என 5 தலைமுறையினர் இணைந்து அவரின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர்.

தற்போதெல்லாம் 60, 70, வயதாகும்போதே நமக்குத் தேவையான வேலைகளைப் பலரால் பிறரை எதிர்பாராமல் செய்ய முடிவதில்லை. ஆனால் 103 வயதாகும் ராமாத்தாள் தனக்கான தேவைகளைத் தானே கவனித்துக்கொள்கிறார். அதோடு பேரன்கள், பேத்திகள் எனக் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அடையாளம் கொண்டுகொள்கிறார். அவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் என எதுவும் கிடையாது.

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தப் பிறந்தநாள் விழாவில் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டு பாட்டியிடம் ஆசி பெற்றனர். இந்த விழாவில் 250 பேர் கலந்துகொண்டனர்.

இதேபோல் கடந்த ஆண்டு தென்கரோலினா பகுதியைச் சேர்ந்த மில்ட்ரெட் போவர்ஸ் என்ற மூதாட்டி 103 வயதில் பிறந்த நாள் கொண்டாடிய சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon