மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

அரசு அச்சகத்தை மூட மத்திய அரசு முடிவு!

அரசு அச்சகத்தை மூட மத்திய அரசு முடிவு!

கோவை அருகேயுள்ள மத்திய அரசின் அச்சகத்தை மூடும் நடவடிக்கை மேற்கொள்வதாக மத்திய அரசின் வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அச்சகத்துறை இயக்குனரகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பிரஸ் காலனி என்னும் பகுதியில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசு அச்சகம் செயல்பட்டு வருகிறது. இந்த அச்சகத்தில் ஆரம்பத்தில் ஆயிரம் பேருக்கும் மேல் பணிபுரிந்து வந்தனர். பின்னர் அச்சுப்பணிகள் குறைந்ததால் படிப்படியாக ஆட்கள் குறைக்கப்பட்டு தற்போது 65 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதனால் சுமார் 134 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக இயங்கி வந்த இந்த அச்சகம் களையிழந்து போனது.

இந்த அச்சகம் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் 17 மத்திய அரசின் அச்சகங்களை ஒருங்கிணைத்து ஐந்து அச்சகமாக்கச் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இங்குள்ள அச்சகத்தை மூடவும் இங்குள்ள பணியாளர்களை வடநாட்டில் உள்ள நாசிக் அச்சகத்திற்கு இடமாற்றம் செய்வதற்கும் மத்திய அரசு முடிவு எடுத்தது.

மத்திய அரசின் முடிவிற்கு இங்குள்ள தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் உள்ள ஒரே மத்திய அரசு அச்சகத்தை மூடக்கூடாது என வலியுறுத்தி வரும் அரசியல் கட்சியினரும் பொது நல அமைப்புகளும் அச்சக தொழிலார்களுடன் இணைத்து உண்ணாவிரதம், மனித சங்கிலி போராட்டம் என பல கட்டத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், கடந்த அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி மதிமுக பொது செயலாளர் வைகோ அச்சகத்திற்கு நேரில் வந்து, அச்சகத்தை மூடாமல் இருக்கத் தமிழக எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த அச்சகத்தின் செயல்பாட்டை வரும் 31ஆம் தேதியோடு நிறுத்தி விட மத்திய அரசின் வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அச்சகத்துறை இயக்குனரகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், “நாடு முழுவதும் உள்ள பதினேழு அச்சகங்களை ஐந்து அச்சகமாகும் முடிவின்படி, இம்மாதம் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அச்சகத்தில் நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும். தற்போது அச்சுப்பணியில் உள்ளவர்கள் பிற அச்சகங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். குமாஸ்தாக்கள், காவலாளிகள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் மட்டும் மூடப்படும் இந்த அச்சகத்தில் உள்ள இயந்திரங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் தொடர்பாக இங்கு சிறிது காலம் பணியில் இருப்பார்கள். இதன் பின்னர் அச்சகம் உள்ள இடம், மத்திய அரசின் நிலம் மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் அல்லது மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அச்சகப்பணி பணி தொடர்பான கல்வி மற்றும் பயிற்சி முடித்த இளைய தலைமுறையினருக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு தமிழகத்தில் இனி, இல்லாமல் போகும் எனக்கூறும் அச்சக பணியாளர்கள் இறுதிவரை தங்களது போராட்டங்கள் தொடரும், எக்காரணம் கொண்டும் இங்குள்ள அச்சகத்தை மூட அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகின்றனர்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon