மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

திருப்பதியில் போலி டிக்கெட்!

திருப்பதியில் போலி டிக்கெட்!

திருப்பதியில் ரூ.300 மதிப்புடைய 192 போலி விரைவு தரிசன டிக்கெட்டுகள் நேற்று (டிசம்பர் 6) பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த 192 பேர் 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுடன் நேற்று திருப்பதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் கொண்டு வந்த தரிசன டிக்கெட்டுகளை ஊழியர்கள் ஸ்கேன் செய்தனர். அப்போது, அவர்களின் டிக்கெட்டுகள் ஸ்கேன் ஆகவில்லை. அதைத் தொடர்ந்து அனைத்தும் டிக்கெட்களும் போலியானவை என்பதை தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் ஊழியர்கள் கண்டறிந்தனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மும்பையைச் சேர்ந்த பிரஷாந்த் தயானந்த் பகத் என்பவர் ஆன்லைன் மூலம் போலி டிக்கெட்டுகள் தயாரித்து, அதற்கு போலியான பார்கோடுகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பக்தர்கள் அனைவரும் விரைவில் இலவச தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

தேவஸ்தான தலைமை கண்காணிப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா, “டிக்கெட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி, பிராஷாந்தை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்களின் நன்மைக்காகக் கொண்டுவந்த திட்டத்தை சிலர் இதுபோல் தவறாக பயன்படுத்துகின்றனர். இந்த டிக்கெட்கள் ஸ்கேன் ஆகி பக்தர்கள் தரிசனம் செய்திருந்தால் விரைவு தரிசன டிக்கெட்டில் மிக பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

பக்தர்களின் வசதிக்காக 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 300 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து விரைவு தரிசனம் செய்யும் முறையை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்து வந்தனர். முன்பதிவு செய்த டிக்கெட்டை பக்தர்கள் நகல் எடுத்து வரவேண்டும். அசல் அடையாள அட்டையைக் கண்டிப்பாக எடுத்து வரவேண்டும். அதேபோல், 12 வயதுக்குட்பட்டவர்களின் வயது சான்றிதழை கண்டிப்பாகக் கொண்டு வரவேண்டும். முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை மாற்றவோ, ரத்து செய்யவோ முடியாது. மேலும், டிக்கெட்களை பெற ஆதார் அட்டையும் கட்டாயமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon