மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

களத்தில் மின்னம்பலம்: இருளில் குமரி மாவட்டம்!

 களத்தில் மின்னம்பலம்: இருளில் குமரி மாவட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம், ஓகி புயலால் சிதைந்துபோய் ஏழு நாட்கள் கடந்தும் மக்கள், குடிநீர் இல்லாமல், பால் இல்லாமல், மின்சாரமில்லாமல் தவித்துவருகிறார்கள்.

கடல் சார்ந்த பகுதியும், மலை சார்ந்த பகுதியும் சேர்ந்ததுதான் கன்னியாகுமரி மாவட்டம். உணவுப் பொருள்களைவிடப் பணப் பயிர்கள்தான் இங்கே அதிகம் விளையும். மரங்கள் இல்லாத வீடே இங்கே இல்லை என்று சொல்லலாம். கடல் மலை, காடு சூழ்ந்த குமரி மாவட்டம், இந்தப் புயலால் தன் இயல்பு வாழ்வை இழந்து தவித்துவருகிறது.

நவம்பர் 29ஆம் தேதி, புயல்வருவது அறியாமல், மீனவர்கள் பலர் எஸ்.டி.பி. போட்டில்

கடலுக்குச் சென்றார்கள். அவர்கள் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. இதுவரையில் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர், எத்தனை பேர் காணவில்லை என்றும் தெரியவில்லை.

மீனவர்கள் மட்டுமில்லாமல், மீனவர்கள் அல்லாத மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் விவசாயமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது . பிள்ளைகளுக்குப் பால் கிடைக்காமலும், குளிக்க, குடிக்கத் தண்ணீர் இல்லாமலும் மக்கள் கஷ்டப்படுவதையும் காண முடிந்தது.

“கடந்த ஒரு வாரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தண்ணீர் இல்லாமல் கொடுமையான முறையில் வாழ்ந்துவருகிறோம், பெண்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்” என்கிறார் மறவன் குடியிருப்புப் பகுதியில் சுவிட்ச் பாக்ஸ் தயாரிக்கும் கம்பெனி முதலாளி ஜூடு சர்ச்சில். “வேதநகர், மறவன்குடி, வல்லன்குமரன்விளை, கரங்குடி ஆகிய பகுதிகளில் குடிசைத் தொழில்போல, சுவிட்ச் பாக்ஸ், பர்னிச்சர்கள் செய்யும் தொழில் செய்துவருகிறோம். இந்தத் தொழிலில் சுமார் 3000 தொழிலாளர்கள் வேலை செய்துவருகிறார்கள். புயல் காற்றால், எங்கள் கம்பெனிகள் காணாமல் போய்விட்டன. மீண்டும் தொழிலைத் தொடங்க மிகவும் சிரமமாக இருக்கும். மீண்டும் தொழிலைத் தொடங்கி ஆயிரக்கணக்கான ஆட்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவதற்கு, தமிழக அரசு வட்டியில்லாத கடன் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கிறார்.

கிராமங்களின் நிலை

“மழை, புயல் காற்றால், வீடுகளிலும் ஆலயங்களிலும் ஆறாகத் தண்ணீர் ஓடியது, கிராமங்களில் மின் இணைப்புகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டு, சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் பலரும் மீனவர்கள் பகுதியை நோக்கித்தான் போகிறார்கள். கிராமங்களில் கவனம் செலுத்தவில்லை. தண்ணீர் இல்லாமல், சமைக்க முடியாமல், வீடிழந்தும், உடைமைகளை இழந்தும், மாற்றுத் துணிகள் இல்லாமல் கிராமத்தில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்” என்று நாகர்கோவில் வேதநகர் பகுதியைச் சேர்ந்த காலின்ஸ் சொல்கிறார்.மேலும்

“அகஸ்த்தீஸ்வரம் தாலுகா, தோவாளை தாலுக்கா ஆகிய பகுதிகளில் விவசாயம் அடியோடு அழிந்துபோயுள்ளது, வீடுகள் இழந்தவர்களை முகாம்களில் தங்கவைத்து உணவுப்

பொட்டலம் வழங்கிவருகிறார்கள், குழந்தைகளுக்குப் பால் கிடைக்கவில்லை.

ஒரு வாரம் கடந்தும் மின் விளக்குகளைப் பார்க்க முடியவில்லை, நகரப் பகுதிகளில்

மட்டும் இரவு 6 மணிக்கு மின் இணைப்பு கொடுத்து, காலையில் 6.00 மணிக்குத்

துண்டித்துவிடுகிறார்கள். மின் கம்பங்கள் சாய்ந்துபோனதால், மாவட்டமே இருளில் மூழ்கிப்போய் உள்ளது. தயவுசெய்து, அதிகாரிகளைக் கிராமங்களுக்கும் சென்று

பார்வையிடச் சொல்லுங்கள். அப்போதுதான் மக்களின் கஷ்டங்கள் தெரியும்” என்றார் .

“மின்சாரமில்லாமல் செல்போனில் யாரையும் தொடர்புகொண்டு விசாரிக்க முடியவில்லை, எஸ்.டி.பி. போட்டில் போனவர்கள் பற்றிச் சரியான விவரங்கள் இதுவரை தெரியவில்லை, கடலூர் மாவட்டத்திலிருந்து கேரளா போன 51 பேரைப் பற்றியும் தெரியவில்லை” என்று கிளிட்டஸ் சொல்கிறார்.

பொருள் நஷ்டம், மீட்சி குறித்த அச்சம்

புயலால் ஏற்பட்டுள்ள பொருள் நஷ்டம் அதிக அளவில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த நஷ்டத்திலிருந்து எப்படி மீளப்போகிறோம் என்னும் கவலை மக்களிடையே தெரிகிறது. மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த டயசின், மலைப் பகுதியில் கஷ்டப்படும்

மக்களுக்கு உணவு, தண்ணீர், உடைகள் வழங்கி உதவிகள் செய்துவருகிறார். மார்த்தாண்டம், குலசேகரம், கலியால், பணிச்சமூடு போன்ற பகுதிகள் கேரள எல்லையில் உள்ளன. இந்தப் பகுதிகளில் பணப் பயிரான ரப்பர் மரங்கள்தான் அதிகம். பத்து வருடங்கள் பாதுகாத்து, ரப்பர் வடியும் நேரத்தில், மரங்கள் அடியோடு சாய்ந்துபோனதைப் பார்த்து விவசாயிகள் கதறுகிறார்கள் என்கிறார் டயசின்.

“70 வருடம் பழமையான ரப்பர், தேக்கு, போன்ற உயர் தரமான மரங்களும் சாய்ந்துவிட்டன.

அதையெல்லாம் எப்படி மீண்டும் உருவாக்கப்போகிறார்களோ என்பதை நினைத்தாலே

இதயம் வெடிக்கிறது. தென்னை, வாழைகளும் மடிந்துபோய்விட்டன. பணப் பயிர்கள் அழிந்துவிட்டதால், மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.

இங்கே வீடுதோறும் மரங்கள் வளர்ப்பார்கள். தேக்கு பலா, மா, நாட்டுத் தேக்கு போன்ற மரங்களை வளர்த்து வீட்டுச் சூழலைப் பசுமையாகவும் நிழலாகவும் வைத்திருப்பார்கள் குமரி மக்கள். அந்த மரங்கள் எல்லாம் விழுந்துவிட்டன. இவை விழுந்ததில் பல இடங்களில் வீடுகளின் சில பகுதிகளும் வாகனங்களும் சிதைந்துவிட்டன.

மலைப் பகுதியான பேச்சிப்பாறை, காயல்பாறை பகுதியில் மக்கள் வசித்துவருகிறார்கள். கீழே இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து போக வேண்டும், சிறு பாதைகளிருக்கும் , அதில் ஜீப் மூலமாகத்தான் போக வேண்டும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் காலமெல்லாம் நடந்துதான் பயணிக்கிறார்கள், அந்த மக்களைப் பார்க்க எந்த அதிகாரிகளும் போகவில்லை,

போகவும் முடியவில்லை. அவர்களில் உணவுக்கும், உடைகளுக்கும் கஷ்டப்படுபவர்களுக்கு, நாங்கள்தான் துணியும் உணவும் கொடுத்து வருகிறோம்” என்கிறார் டயசின்.

மின்சாரம் முழுமையாக வழங்கினால் குடி நீர் பிரச்சினையும், உணவுப் பிரச்சினையும் தீர்ந்துவிடும். சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் இன்னும் பல கிராமங்களுக்கு நிவாரண, மீட்புப் பணியாளர்கள் போக முடியவில்லை.

நண்பர்கள் ஒன்று சேர்ந்து முடிந்த அளவுக்கு உதவிகள் செய்துவருகிறோம் என்றார்.

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி . மேலும் “கன்னியாகுமரி மாவட்டத்தில் 197 மீனவர் கிராமங்களிலிருந்து, கடலுக்குச் சென்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பற்றிச் சரியான தகவல்கள் இல்லை. தேடுவதில் அரசு சுணக்கமாக இருக்கிறது. மீனவர்கள் குடும்பங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் மூன்று பேர், ஐந்து பேர் என்று கடலுக்குச் சென்றுள்ளார்கள். சின்னத்துறை கிராமத்தில் ஒரே குடும்பத்திலிருந்து கடலுக்குப் போன எட்டு ஆண்கள் எங்கே, எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மீனவர்கள் நிலையை நினைத்தால் வேதனையாக உள்ளது” என்கிறார் .

பக்கத்தில் உள்ள கேரளா அரசு செயல்படும் வேகத்துக்கு, தமிழக அரசின் வேகம் குறைவாகவே உள்ளது என்று பலரும் கருதுகிறார்கள். “இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ 4 லட்சம் அறிவித்துள்ளது தமிழக அரசு. பக்கத்து மாநிலமான கேரளாவில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ15 லட்சம் நிதி வழங்குகிறது கேரள அரசு. தமிழகத்தில் மனிதன் உயிர் மலிவானதா என்ன? இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ 15 லட்சம் நிதி வழங்கவேண்டும்” என்கிற கோரிக்கையும் வலுத்துள்ளது .

நீரோடி, அழிக்கால், குளச்சல், போன்ற மீனவர்கள் பகுதியிலிருந்து எஸ்.டி.பி. போட்டுக்குச் சென்றவர்களைத் தேடும் பணியில் தமிழக அரசு மெத்தனமாக இருக்கிறது என்று கிளிட்டஸ் கூறுகிறார். “தமிழக மீனவர்கள் சிலரை கேரளா அரசுதான் மீட்டுள்ளது. மீனவர்கள் வாழ்வாதாரமே நாசமாகிவிட்டது, பல போட்கள் கவிழ்ந்து, உடைந்துள்ளது, மீண்டும் ரிப்பேர் செய்தாலும் பலனிருக்காது, உயிரோடு கடலுக்குச் சென்ற மீனவர்களை, உயிரோடு மீட்டுவர வேண்டும். மின் இணைப்புகள் உடனே வழங்க வேண்டும், உணவும் உடைமையும் அவசரமாகத் தேவைப்படுகிறது” என்று செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிடுகிறார்.

ரப்பர், தேக்கு, மா, பலா, தென்னை, நெல் பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர்கள் பாழாகியுள்ளது, குமரி மாவட்டத்தைப் பேரிடர் மாவட்டமாக அறிவித்து, மாவட்ட மக்கள் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்று விஜயதாரணி கோரிக்கை விடுக்கிறார். “அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என்று மூச்சுக்கு முப்பதுமுறை சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், குமரி மாவட்டத் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பால் இல்லாமல் தவிப்பதையும், பாத்ரூம் போகத் தண்ணீர் இல்லாமல் பெண்கள் தவிப்பதையும் அறிந்து, மக்களின் அவசர தேவைகளை உடனே பூர்த்திசெய்ய வேண்டும்” என்கிறார் அவர்.

கேரளமும் தமிழகமும்

மாவட்டத்தில் நிவாரண, மீட்புப் பணிகளை கவனித்துவரும், விவசாயத் துறைச் செயலாளர் ககன் தீப்சிங் பேடி, மக்களுக்கு மின்சாரம் வழங்க, மின் வாரிய சேர்மேன் சாய்குமார் தலைமையில், 5500 மின் வாரிய ஊழியர்கள் கடுமையாக வேலைசெய்து வருகிறார்கள் என்று தெரிவிக்கிறார். “நகராட்சி, பேரூராட்சிகளில், மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் புதிய மின் கம்பங்களை நிறுத்தி லைன் இழுக்கப்பட்டுவருகிறது. அவசர உதவிக்கு ஜெனரேட்டர் மூலமாக வாட்டர் டேங்க் நிரப்பி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது” என்று மீட்புப் பணிகளை ககன் தீப்சிங் விவரிக்கும்போது, “நான் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து, மக்கள் தேவைகளைப் பூர்த்திசெய்துவருகிறேன். 3690 ஹெக்டர் பயிர்கள், ரப்பர், தேக்கு, வாழை, தென்னை, பாதிக்கப்பட்டுள்ளன, கடலுக்குச் சென்ற மீனவர்கள் பற்றி முழுமையான கணக்கெடுப்பு பணி முடியவில்லை, இன்று இரவு முடிந்துவிடும். மாவட்ட மக்களுக்குத் தேவையானதை, முதல்வர் அக்கறையுடன் கேட்டுவருகிறார், அனைத்து அதிகாரிகளும் இரவு பகலாக வேலை செய்துவருகிறார்கள்” என்று கூறுகிறார்.

பேரிடர் காலங்களில் அரசு எத்தனை வேகமாக வேலை செய்தாலும் அது போதாது என்ற உண்ர்வு தான் ஏற்படும். குடிநீர்ப் பிரச்சினை இல்லாத குமரி மாவட்டத்தில் மின்சாரம் இல்லாததால் இன்று குடிநீர்ப் பிரச்சினை நிலவுகிறது. சாலைகளில் விழுந்து கிடக்கும் அம்மரங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்படாததால் பல இடங்களுக்கும் இன்னமும் நிவாரண உதவிகள் போய்ச் சேரவில்லை. போக்குவரத்தையும் மின் இனைப்பையும் விரைவில் சீரமைப்பதே இன்று மிகவும் அவசரமாகச் செய்தாக வேண்டிய பணிகள். இவ்விஷயத்தில் அரசு எந்த அளவுக்கு வேகமும் அக்கறையும் காட்டுகிறதோ அந்த அளவுக்கு விரைவாக மாவட்டம் மீண்டு எழும்.

பக்கத்தில் உள்ள கேரள அரசின் வேகத்தோடும் நிவாரண உதவிகளோடும் ஒப்பிடப்படுவது தவிர்க்க முடியாதது. அதுபோலவே, குமரி மாவட்டத்தில் அதிமுகவுக்குச் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லை என்பது இந்தச் சமயத்தில் அரசியலாக்கப்படுவதும் தவிர்க்க முடியாததுதான். “மாவட்டத்தில் அதிமுக எம்.ஏல்.ஏ.க்கள் இல்லையென்று, மாவட்ட மக்களைப் பழிவாங்க வேண்டாம். பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்துக்குக் காட்டும் அக்கறையைத் தமிழகத்தில் குமரி மாவட்டத்துக்கும் காட்ட வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி விடுக்கும் கோரிக்கையை மக்களும் பல இடங்களில் பிரதிபலிக்கிறார்கள்.

“குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதியாகப் பாராளுமன்றத்துக்குச் சென்று மத்திய அமைச்சராக வலம்வரும் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அரசிடம் நிதி கேட்டு மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும், காணாமல் போன மீனவர்களைக் காப்பற்ற அக்கறை காட்ட வேண்டும்” என்று விஜயதாரணி சொல்வது குமரி மாவட்டத்தின் குரலாகவே எதிரொலிக்கிறது.

- காசிநாதன்

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon