மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

தேர்தலை ரத்துசெய்ய சதி!

தேர்தலை ரத்துசெய்ய  சதி!

ஏற்கனவே திமுக வெற்றிபெறப் போவதை அறிந்துதான் இடைத் தேர்தல் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ரத்து செய்ய சதி நடக்க வாய்ப்புள்ளது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

வரும் 21ஆம் தேதி ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேச்சையாக தினகரன் ஆகியோர் போட்டியில் உள்ளனர். இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்துள்ள நிலையில், சுயேச்சையாகப் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்ட நடிகர் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டது. இதற்குப் பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து, தேர்தல் அலுவலரை மாற்றக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று ( டிசம்பர் 7) கொளத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், "89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா நடைபெற்றதாகக் கூறித்தான் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதற்கான நடவடிக்கை எடுத்துவிட்டு தேர்தல் நடைபெற்றிருந்தால், நியாயமான முறையில் நடைபெறும் என்று நம்பலாம். ஆனால் பணப் பட்டுவாடாவில் சம்பந்தப்பட்ட முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் உள்பட யார் மீதும் எப்.ஐ.ஆர்.கூடப் பதிவு செய்யாத நிலையில், மீண்டும் தற்போது தேர்தல் நடைபெறவுள்ளது. அதாவது இடைத் தேர்தலுக்கு ஒரு இடைத் தேர்தல் தற்போது வந்துள்ளது" என்றார்,

"தேர்தலை முறையாக நடத்தத் தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது. இந்த அறிவிப்புகள் முறையில் தேர்தலை நடத்தினால் நிச்சயம் திமுக மிகப் பெரிய வெற்றிபெறும். விஷால் விவகாரத்தில் தேர்தல் அலுவலர் நடந்து கொண்டுள்ள நிகழ்வு குறித்து டெல்லி தலைமை தேர்தல் ஆணையம் முறையாக விசாரணை நடத்த வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை எடுத்ததால்தான் இந்தத் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறும்" என்றும் கூறினார்.

தேர்தலை நிறுத்த சதி நடக்கிறது என்ற குற்றச்சாட்டை திருமாவளவன் முன்வைத்துள்ளாரே என்ற கேள்விக்கு, "இருக்கலாம், கடந்த இடைத் தேர்தலில் திமுக வெற்றிபெறப் போவதையறிந்ததன் அடிப்படையில்தான், பணப் பட்டுவாடாவைக் காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது. இப்போதும் சதி நடக்கலாம், ஆச்சரியப்படுவதற்கில்லை" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கொளத்தூர் தொகுதியில் நடைபெற்றுவரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் ஸ்டாலின். திக்காகுளம் சலவைத் தொழிலாளர்கள் குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்ட அவர், அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon