மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

விபத்தில் பலியான வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்!

 விபத்தில் பலியான வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்!

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், விபத்தினால் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

சென்னை, அலெக்ஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (37). சொந்தமாக மீன் பண்ணை நடத்திவந்தார். இவரது மனைவி ஆனந்தி (28), ஆசிரியர் பயிற்சி முடித்தவர். இவருக்கு ஷியானி (4), பிரியதர்சன் (9) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ராஜேஷ் குமார் கடந்த திங்கள்கிழமையன்று (டிசம்பர் 4) தனது நண்பர் ஒருவரை கோயம்பேடு பேருந்து நிலயத்தில் இறக்கிவிட்டு வீடு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், ராஜேஷ் குமார் செவ்வாய்க்கிழமை இரவு மூளைச் சாவு அடைந்தார். உடனடியாக இது குறித்து அவர் குடும்பத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடலுறுப்பு தானம் பற்றியும் குடும்பத்தினரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது. அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ராஜேஷ் குமாரின் இதயம், சிறுநீரகம், கண்கள், தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.

ஒரு சிறுநீரகம் மற்றும் தோல் ஆகியவை ஸ்டான்லி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கே.எம்.சி மருத்துவமனைக்கும், கண்கள் எழும்பூர் மருத்துவமனைக்கும், இதயம் ஒரு தனியார் மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன. இதயம், போக்குவரத்துக் காவலர்களின் உதவியுடன் வேகமாகக் கொண்டுசெல்லப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையின் முதல்வர், டாக்டர் பென்னம்பல நமச்சிவாயம் தலைமையில் நோயாளி ஒருவருக்கு உடனடியாகப் பொருத்தப்பட்டது.

உடலுறுப்பு தானத்தில் தேசிய அளவில் தொடர்ந்து 3ஆவது முறையாகத் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. பொதுமக்களுக்கு உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது என்பதை இச்சம்பவம் காட்டுகிறது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon