மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

அமைச்சர் சரோஜா கோரிக்கை நிராகரிப்பு!

 அமைச்சர் சரோஜா கோரிக்கை நிராகரிப்பு!

தான் பெற்ற தேர்தல் வெற்றிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் சரோஜா கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 7)தள்ளுபடி செய்துவிட்டது.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் துணை சபாநாயகருமான வி.பி. துரைசாமி போட்டியிட்டார். அவருக்கு எதிராக அதிமுக சார்பில் சரோஜா போட்டியிட்டார்.

தேர்தல் முடிவில் வி.பி. துரைசாமியை விட சுமார் 9 ஆயிரம் வாக்குகள் அதிகம் வாங்கி சரோஜா வெற்றி பெற்றார். அமைச்சராகவும் ஆனார்.

இந்நிலையில் வெற்றி வாய்ப்பை இழந்த வி.பி.துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் சரோஜாவின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் வி.பி. துரைசாமிக்காக திமுகவின் தலைமைக் கழக வழக்கறிஞரான வி.அருண் ஆஜரானார்.

‘’தேர்தலை எதிர்கொண்டபோது சரோஜா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியும், காவல் துறையைப் பயன்படுத்தியும் முறைகேடுகள் செய்துள்ளார். கோவில் கட்ட பணம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு பணம் கொடுத்து அதை தனது குடும்பத்தினர் மூலமாக விநியோகித்துள்ளார். பிரியாணி விருந்து வைத்தும் மக்களுக்கு லஞ்சம் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார்’’ என்று வி.பி. துரைசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமைச்சர் சார்பில் இரண்டு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அமைச்சர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராமானுஜம் ஆஜராகி வாதிட்டார். ‘வி.பி. துரைசாமி தாக்கல் செய்துள்ள மனு பொய்யான தகவல்கள் அடங்கியது. இப்படிப்பட்ட மனுக்களை எல்லாம் விசாரித்தால் விசாரணை முடியவே முடியாது. இதுபோன்ற மனுக்களை எல்லாம் விசாரணைக்கே ஏற்றுக் கொள்ளக் கூடாது’ என்று கோரியிருந்தார் அமைச்சர் .

வி.பி. துரைசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.அருண், தங்களது மனுவில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் எல்லாமே தேர்தல் சட்டத்துக்கு உட்பட்டவை என்றும், அதற்கான தக்க ஆவணங்களை இணைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் தங்கள் மனு விசாரணைக்கு உகந்ததுதான் என்றும், இணைத்துள்ள ஆவணங்களின் உண்மைத் தன்மை பற்றி விசாரணையின் போது நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும் மனுவின் தன்மை பற்றி ஆராயாமலே அது பொய் என்று வெறும் வார்த்தையில் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சட்ட நுணுக்கங்களோடு வாதாடினார் வி.அருண்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மனுதாரரின் வழக்கறிஞர் வி.அருணின் வாதங்களை ஏற்றுக் கொண்டு, ‘வி.பி. துரைசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. அவர்களின் மனுவில் இணைக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் உண்மையானதா திரித்துக் கூறப்பட்டுள்ளதா என்பதை விசாரணையின் மூலம்தான் அறிய முடியும்’ என்று கூறி அமைச்சரின் மனுக்களை தள்ளுபடி செய்தது.

வி.பி. துரைசாமியின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதுடன், ‘வரும் 20-ம் தேதிக்குள் அமைச்சர் சரோஜா தனது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். 21 ம் தேதி இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்றும் கூறியுள்ளது நீதிமன்றம்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon