மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

முதல்வரைச் சந்தித்த வரலட்சுமி

 முதல்வரைச் சந்தித்த வரலட்சுமி

தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் மகளிர் நீதிமன்றம் நிறுவ வேண்டும் என்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை வரலட்சுமி.

வரலட்சுமி கடந்த மார்ச் மாதம் ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பைத் துவங்கினார். இந்த அமைப்பின் மூலம் அதிக அளவிலான மகிளா நீதிமன்றங்களை ஆரம்பிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது. மாவட்ட அளவில் அதிக அளவிலான மகிளா நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டால் அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்ப்புகள் கிடைக்கும் என்றும் வலியுறுத்தினார். அதன் காரணமாக சேவ் சக்தி அமைப்பினர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும், மத்திய இணை சட்ட அமைச்சர் பி.பி.சௌத்ரி அவர்களையும் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் 9 மாதங்களுக்குப் பிறகு சென்னை தலைமைச் செயலகத்துக்கு வரலட்சுமி நேற்று (டிசம்பர் 6) சென்றிருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சமூகநலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோரை அவர் சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மகளிர் நீதிமன்றம் நிறுவ வேண்டும் என்று நாங்கள் நடத்தி வரும் சேவ் சக்தி இயக்கம் சார்பில் அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தோம். அந்தக் கோரிக்கையின் நிலை என்ன என்பதை அறிவதற்காக இங்கு வந்தேன். தற்போது சட்டத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். மேலும் நீதிமன்றத்துக்கும் அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மகளிர் நீதிமன்றங்கள் சம்பந்தமான எங்கள் கோரிக்கை இந்த அளவில்தான் உள்ளது” என்று வரலட்சுமி கூறினார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon