மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

சிறுநகரங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்!

 சிறுநகரங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்!

இந்தியாவின் இரண்டாம் கட்ட நகரங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாஸ்காம் தெரிவித்துள்ள அறிக்கையில், " இந்தியாவின் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகமாக உருவாகும். இந்தியாவின் இரண்டாம் தர நகரங்கள் தான் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மையமாக விளங்குகிறது.

இந்தியாவில் தற்போது 5,200 தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. இதில் கிட்டத்தட்ட 20 சதவிகித (1020) ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இரண்டாம் தர நகரங்களில் தான் உள்ளன. மேலும் 190 வணிகக் காப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களில் 40 சதவிகித (76) பேர் இரண்டாம் தர நகரங்களில் தான் உள்ளனர். குறிப்பாக அகமதாபாத், புனே, ஜெய்ப்பூர், சண்டிகர், லக்னோ போன்ற நகரங்களில் தான் உள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

பொதுவாகவே, இந்தியாவின் இரண்டாம் தர நகரங்களில் தான் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இந்தியாவின் தற்போதைய பொருளாதார சூழல் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீடு செய்யும் வகையில் ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது. இந்த நிதியாண்டின் (2017-18) முதல் அரையாண்டில் கிட்டத்தட்ட 6.4 பில்லியன் டாலர் வரையில் இத்துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த நிதியாண்டில் இத்துறை 164 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது.

சுகாதாரம், கல்வி, நிதித்துறை, புதுப்பிக்கத் தக்க ஆற்றல், வேளாண்துறை ஆகிய துறைகளில் உள்ள சவால்களை எதிர்கொள்ள தற்போது நாட்டில் 325 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon