மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

பரோல் கேட்டு நளினி மனு!

 பரோல் கேட்டு நளினி மனு!

லண்டனில் வசிக்கும் தனது மகள் ஹரித்ரா திருமணத்திற்காக, பரோல் அனுமதி கேட்டிருக்கிறார் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் நளினி. அவர் சார்பாக, இன்று (டிசம்பர் 7) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று நளினி, முருகன் உட்பட 7 பேர் சிறையில் இருந்துவருகின்றனர். 26 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் தண்டனை அனுபவித்துவரும் நிலையில், இவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்ற குரலும் வலுத்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அப்போது அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.

தற்போது, லண்டனில் நளினியின் மகள் ஹரித்ரா வசித்து வருகிறார். அவரது திருமண ஏற்பாடுகள் அங்கு நடந்துவருகின்றன. மகளின் திருமண விழாவில் கலந்துகொள்ள விரும்பும் நளினி, இதற்காக 6 மாதம் பரோலில் தன்னை விடுவிக்க வேண்டுமென்று அனுமதி கேட்டார். கடந்த ஜூலை மாதம் இது தொடர்பாக, அவரது சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய பதிலை அளிக்க வேண்டுமென்று கேட்டது நீதிமன்றம். நளினியை பரோலில் விடுவித்தால், அவர் வெளிநாடு தப்பிச் சென்றுவிடுவார் என்று பதில் மனு தாக்கல் செய்தது தமிழக அரசு.

இன்று (டிசம்பர் 7) மீண்டும் தன்னை பரோலில் விடுவிக்க அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார். பரோலில் விடுவித்தால் தப்பிச்சென்றுவிடுவார் என்ற தமிழக அரசின் பதிலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நளினி. லண்டனில் திருமணம் முடிந்ததும் சிறைக்குத் திரும்புவதாக உறுதி அளித்திருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருமெனத் தெரிகிறது.

ராஜிவ் கொலைவழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி, வரும் டிசம்பர் 10ஆம் தேதி சிறைக்கைதிகள் உரிமை மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon