மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

மீனவர்களுக்காகத் திரண்ட குமரி மக்கள்!

மீனவர்களுக்காகத் திரண்ட குமரி மக்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தை ஓகி புயல் தாக்கியபோது காணாமல்போன மீனவர்களை உடனடியாகக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 7) மாபெரும் பேரணி நடைபெறுகிறது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிரமாண்டமான பேரணியில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

நவம்பர் மாதம் 30ஆம் தேதி வங்கக் கடலில் ஓகி புயல் உருவானது. இதனால் தென் தமிழகமும், கேரள மாநிலத்தின் ஒரு சில பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

ஓகி புயல் வருவதற்கு நீண்ட நாள்களுக்கு முன்பே ஆழ் கடலில் தங்கி மீன் பிடிக்கச் சென்ற 8 கிராமங்களைச் சேர்ந்த 1159 மீனவர்கள் நிலை தற்போது வரை என்ன ஆனது என்று தெரியவில்லை. புயல் பாதிப்பால் தமிழகம் கேரள மீனவர்கள் என இதுவரை மொத்தம் 33 பேர் உயிரிழந்துள்ளதாகக் கேரள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவர்களை மீட்க இந்தியக் கடலோரக் காவல் படையும், விமானப் படையும், கடற்படையும் நடவடிக்கை எடுத்துவருகின்றன.

சின்னத்துறை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 மீனவர்களையும் காணவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என்ற அச்சம் மீனவக் குடும்பத்தினரிடையே நிலவிவருகிறது. இதையடுத்து சின்னத்துறையில் இருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பத்தினர் ஒன்று கூடித் தமிழக அரசுக்கு எதிராக தங்கள் கைகளில் கருப்பு துணி ஏந்தியபடி, கோஷங்கள் எழுப்பிக் கண்டனப் பேரணி நடத்திவருகின்றனர்.

இவர்கள் சின்னத்துறையிலிருந்து குளித்துறையில் உள்ள ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும், பலியான மீனவர் குடும்பத்திற்கு கேரளா அரசு வழங்கியுள்ளது போல் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், உயிரிழந்தவர் குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இவர்கள் விடுத்துள்ளனர்.

புயலினால் பாதிப்படைந்த பகுதியான கன்னியாகுமரியை முதல்வர் இதுவரை நேரில் சென்று பார்வையிடாதது ஏன், காணாமல் போனவர்களின் விவரங்களையும் இதுவரை வெளியிடாதது ஏன் என்று முழக்கமிட்டுப் பெண்கள் பேரணியாகச் செல்கின்றனர்.

குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இரயுமன் துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, புத்தன் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி, புதுக்கடை உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டுவருகின்றனர். மீனவர்களின் பேரணி 25 கி.மீ. கடந்து சென்றுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் பேரணியில் அலையாய் திரண்டு கலந்துகொள்கின்றனர்.

திருச்சியில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன் மாயமான மீனவர்களை மீட்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துப் பாடல்கள் பாடி ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறார்.

மாயமான மீனவர்களைத் தேடும் பணி குறித்து இந்திய கடற்படை கொடுத்துள்ள தகவலில், இந்திய கடற்படையை சேர்ந்த 9 கப்பல்கள், கடலோர காவல்படையை சேர்ந்த 12 கப்பல்கள் மூலம் மாயமான மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் மறியல் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், அரசு பேருந்துகளை நிறுத்தி வைத்துள்ளனர். தனியார் வாகனங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரணி நடைபெறும் பகுதிகளில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க குழித்துறை ரயில் நிலையத்திலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon