மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

அதிமுக பிரச்சாரம்: தினகரனுக்கு மறுப்பு!

 அதிமுக பிரச்சாரம்: தினகரனுக்கு மறுப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனனுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட அதிமுகவினர் இன்று பிரச்சாரத்தைத் துவங்கிய நிலையில், தினகரன் தரப்பினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆர்.கே.நகருக்கு டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அமைச்சர்கள் ஆகியோர் பிரச்சாரத்தை இன்று (டிசம்பர் 7) துவங்கியுள்ளனர். வாகனத்தில் இருந்தபடி அவர்கள் வாக்கு சேகரித்தனர். அப்போது பேசிய எடப்பாடி, மேயராக இருந்தபோது ஆர்.கே.நகர் பகுதிக்கு மு.க.ஸ்டாலின் எந்த நன்மையும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

பகுதியின் செல்லப்பிள்ளையாக மதுசூதனன் உள்ளார் என்று குறிப்பிட்ட பன்னீர்செல்வம், அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களின் நிலை உயரும் என்றும், தொகுதியில் உள்ள நடுத்தர மக்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில், ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்ய டிடிவி.தினகரனுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இன்று பிரச்சாரம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் அனுமதி கோரிய நிலையில் மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் செய்யத் தினகரனுக்குக் கடந்த 4 நாட்களாக, காவல்துறை அனுமதி மறுத்துவருகிறது என்று கூறப்படுகிறது. இதனால் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க முடியாமல் தினகரன் தரப்பு தவித்துவருகின்றனர்.

இதனிடையே, திமுக வேட்பாளர் மருது கணேஷ் வேட்புமனு தாக்கல் செய்த நாள் முதலாகவே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். வரும் நாட்களில் அவரை ஆதரித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon