மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

விரைவில் சிறுவர்களுக்கான சிறப்பு நீதிமன்றம்!

விரைவில் சிறுவர்களுக்கான சிறப்பு நீதிமன்றம்!

குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு வழக்குகளை விசாரிக்கும் வகையில் ஐதராபாத்தில் சிறுவர்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விரைவில் அமையவுள்ளது என்று குற்றம் மற்றும் சிறப்பு விசாரணை அதிகாரி சுவாதி லக்ரா தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு, பலாத்காரம், வீட்டுவேலை செய்து கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க ஐதராபாத் காவல் துறை சார்பில் 2016ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி ‘பாரோசா’ உதவி மையம் உருவாக்கப்பட்டது.

அந்த மையம் சார்பில் குழந்தைகள் மீதான பல்வேறு வன்முறை வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, தற்போது குழந்தைகள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குற்றம் மற்றும் சிறப்பு விசாரணை கூடுதல் ஆணையர் சுவாதி லக்ரா கூறுகையில், “பாலியல் தொந்தரவுகளில் இருந்து குழந்தைகளை காப்பாற்றும் சட்டம் மூலம் பாரோசா உதவி மையம் அமைக்கப்பட்டது. அதன் மூலம் குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டுவந்தன. இதன் அடுத்த கட்டமாக இந்த வழக்குகளை விசாரிக்கச் சிறுவர்களுக்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பத்தை ஐதராபாத் உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில் விரைவில் சிறப்பு நீதிமன்றம் அமைய உள்ளது” என்றார்.

குழந்தைகள் நலன் அடிப்படையில் இந்த நீதிமன்றம் அமைக்கப்படும். அதன் மூலம் குழந்தைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிப்பது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளிடம் எளிதாக உரையாடும் வகையில் இந்த நீதிமன்றத்திற்கு நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம் குழந்தைகள் பலாத்காரம், வீட்டு வேலை செய்ய வைத்து கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் விசாரிக்கப்படும். ஏற்கனவே பாரோசா மையம் மூலம் இதுவரை 2900 வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன. தற்போது கொண்டுவரப்படும் இந்தத் திட்டத்தின் மூலமும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon