மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

கேரளா: மது அருந்துவதற்கான வயது 23!

கேரளா: மது அருந்துவதற்கான வயது 23!

மது அருந்துபவர்களின் வயதை 23ஆக உயர்த்த, பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், இம்முடிவு பெரிய பலனைத் தராது என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் எதிர்க்குரல் எழுப்பியிருக்கிறது.

கேரளாவில் ஆட்சியிலிருக்கும் பினராயிவிஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, மதுவிலக்கு தொடர்பான பல விஷயங்களை அம்மாநிலத்தில் அமல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மது அருந்துபவர்களின் வயதை 23 ஆக மாற்றியுள்ளது. இது தொடர்பாக, நேற்று (டிசம்பர் 6) அம்மாநிலத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அக்பரி சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

மது அருந்தும் பழக்கம் குறைந்த நிலையில், கேரளாவில் இதர போதை பழக்கங்கள் அதிகமானதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், கேரளாவில் போதை மீட்பு மையங்களை அம்மாநில அரசு அமைத்துவருகிறது. இந்த நிலையில், கேரள அரசு மது அருந்துபவர்களின் வயதை 21இலிருந்து 23ஆக உயர்த்தியுள்ளது.

”கடந்த 2011-16 காலகட்ட ஆட்சியில், கேரளாவில் இருந்த உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு மதுக்கடைகளை படிப்படியாக மூட முடிவு செய்தது. இதன்படி, 2014ம் ஆண்டுக்குப் பிறகு புதிய பார்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதோடு, ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீத கடைகள் மூடப்படும் எனவும், படிப்படியாக மாநிலம் முழுவதும் மதுவிலக்கு அமலில் வரும் எனவும் தெரிவித்தது. இதன்படி வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகளுக்கு அருகேயுள்ள மதுக்கடைகள் மூட வழிவகை செய்யப்பட்டன. ஆனால், தற்போதைய பினராயி விஜயன் அரசு அதற்கு எதிரான திசையில் செல்கிறது” என குற்றம் சாட்டியிருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

”கடந்த செப்டம்பர் மாதம், தற்போதுள்ள கேரள அரசு நான்கு நட்சத்திர அந்துஸ்துள்ள ரெஸ்டாரண்ட்கள் மற்றும் பார்களுக்கான விதிமுறைகளை தளர்த்தியது. வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகளில் இருந்து 200 மீட்டர் தொலைவில் மதுக்கடைகள் இருக்க வேண்டுமென்ற விதியை, 50 மீட்டராக குறைத்தது. எங்கள் ஆட்சியில் இருந்த மது கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, தற்போது தாராளமாக மது புழங்குகிறது. அதனால், மது அருந்துபவர்களுக்கான வயது வரம்பை 23ஆக உயர்த்துவது வெறும் கண் துடைப்புதான்” என்றிருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோசப் வடக்கன்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon