மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

போர்வெல் லாரி மீது வேன் மோதி 10 பேர் பலி!

 போர்வெல் லாரி மீது வேன் மோதி 10 பேர் பலி!

திருச்சி அருகே போர்வெல் லாரிமீது வேன் மோதியதில் இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

நாகர்கோவில் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம் (44). இவர் நேற்று(டிசம்பர் 06) மதியம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 15 பேருடன் டெம்போ டிராவலர் வேனில், திருப்பதிக்குச் சென்றனர்.

நேற்று நள்ளிரவு 11. 40 மணியளவில் மதுரை-திருச்சி சாலையில் உள்ள துவரங்குறிச்சி ஊருக்குள் செல்லும் மூரணிமலை திருப்பத்தில் உள்ள சர்வீஸ் சாலையில் வேன் சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த போர்வெல் லாரிமீது வேன் பயங்கரமாக மோதியது. இதில் 5 ஆண்கள், 3 பெண்கள் , 2 குழந்தைகள் என மொத்தம் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தை அறிந்து வந்த துவரங்குறிச்சி போலீஸார் அப்துல்கபூர் தலைமையிலான போலீஸார் மற்றும் தீயணைப்புப் படைவீரர்கள், விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். வேன் கடுமையாக நசுங்கி இருந்ததால், மீட்புப்பணியில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சுமார் 1 மணிநேரம் போராடி, படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலிருந்து வந்த போர்வெல் லாரி, துவரங்குறிச்சியை அடுத்த முத்துப்பட்டி கிராமத்துக்குப் போர் போட வந்ததாகவும், போர்வெல் லாரியை ஓட்டுநர் சந்திரசேகரன் ஓட்டிவந்ததாகவும், வேலைப்பளு காரணமாக ஓய்வெடுக்க போர்வெல் லாரியை நிறுத்திவைத்திருந்த போது பின்னால் வந்த வேன் மோதியதால் இந்த விபத்து நடந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.

மேலும் சாலையில் உரியப் பாதுகாப்பு விளக்குப் போடாமல் லாரியை நிறுத்தியிருந்ததும், வேன் ஓட்டுநர் ராஜேஷ் மிக வேகமாக வந்ததில் கவனிக்காமல் மோதியதும் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon