மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

இந்துக்கள் நம்பிக்கை: விளையாடும் காங்கிரஸ்!

 இந்துக்கள் நம்பிக்கை: விளையாடும்  காங்கிரஸ்!

இந்துக்களின் நம்பிக்கையோடு காங்கிரஸ் கட்சி விளையாடுவதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி நிலப்பிரச்னை தொடர்பான வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான கபில்சிபல், வழக்கின் விசாரணையை 2019ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்தே காங்கிரஸ் இவ்வாறு கூறியுள்ளதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். பிரதமர் மோடியும் இந்த வாதத்துக்குக் கண்டனம் தெரிவித்த நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இதனைக் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் (நேற்று) டிசம்பர் 6 கூறியதாவது, “இந்துக்களின் மத நம்பிக்கையோடு காங்கிரஸ் விளையாடி வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதைப் பார்க்க விரும்புகிறதா, இல்லையா என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும். காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தபொழுது, ராமர் பாலத்தை இடிக்க முயற்சித்தது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டபோது, ராமர் மற்றும் கிருஷ்ணர் ஆகியோரின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது காங்கிரஸ். ராகுல் காந்தி முன்பு ஒரு சமயத்தில், பெண்களைக் கேலி செய்யவே, மக்கள் கோயிலுக்கு செல்வதாகக் கூறி இருந்தார். ஆனால், தற்போது ராகுல்காந்தி கோயிலுக்குச் செல்வது ஏன்? கோயிலுக்குச் செல்வதில் எந்தத் தவறும் இல்லை. நம்பிக்கையின் அடிப்படையில் கோயிலுக்கு செல்ல வேண்டும்; பாசாங்குத்தனமாக செல்லக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon