மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

முதல் வெற்றியை ருசித்த ஜாம்ஷெட்பூர்!

முதல் வெற்றியை ருசித்த ஜாம்ஷெட்பூர்!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டிகள் கடந்த மாதம் முதல் நடைபெற்றுவருகின்றன. இந்தப் போட்டியில் நேற்று (டிசம்பர் 6) நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி டெல்லி அணியை வென்று முதல் வெற்றியை ருசித்தது.

இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடத்தப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கடந்த மாதம் தொடங்கிய இந்தியன் சூப்பர் லீக் 4ஆவது சீசன் போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்றுவருகின்றன.

டெல்லியில் நேற்று மாலை (டிசம்பர் 6) நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி, டெல்லி டைனமோஸ் எப்.சி. அணியை எதிர்கொண்டது. இரண்டு அணிகளும் சரிசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் பாதி முடியும் வரை இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 61ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் இசூ அசூகா ஒரு கோல் அடித்தார். அதன் பின்னர் டெல்லி அணியின் கோல் முயற்சியை ஜாம்ஷெட்பூர் அணி தடுத்து விளையாடத் தொடங்கியது. இரண்டாம் பாதி முடியும் வரையில் எந்த கோலும் விழவில்லை. ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

4ஆவது லீக்கில் அறிமுகமாகிய ஜாம்ஷெட்பூர் அணி தொடந்து சிறப்பாக விளையாடிவருகிறது. இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி, மூன்று டிராவுடன் 6 புள்ளிகள் எடுத்துள்ள ஜாம்ஷெட்பூர் அணி புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது.

இன்று (டிசம்பர் 7) சென்னையில் நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் சென்னையின் எப்.சி - அதெலிடிகோ டி கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. சென்னை ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon