மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

ஆர்.கே.நகர்: மம்தாவுக்குத் தினகரன் தூது!

ஆர்.கே.நகர்:  மம்தாவுக்குத் தினகரன்  தூது!

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் என்று தனது ஆதரவாளர்கள் அழைத்தாலும், தேர்தல் கமிஷனின் தீர்ப்புப்படி இப்போது தனது லெட்டர் பேடை கூட மாற்றிவிட்டார் தினகரன். அதில், ‘தினகரன் முன்னாள் எம்.பி’ என்ற அடையாளம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டாலும், தனக்கு சுயேச்சை என்ற பிம்பம் விழுந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார் தினகரன். இதற்கு வலு சேர்க்கும் விதமாக தமிழ்நாட்டில் இருக்கும் சிறு சிறு கட்சிகளை தினகரனுக்கு ஆதரவு அளிக்கச் செய்யும் ஏற்பாடுகள் ஒருபக்கம் நடந்து வருகின்றன.

இன்னொருபக்கம் ஆர்.கே.நகரில் தனது பலத்தைத் தேர்தல் பிரசாரத்திலேயே காட்ட வேண்டும் என்று முடிவெடுத்த தினகரன் தரப்பு, பாஜகவைச் சமீபகாலமாக தாங்கள் வெளிப்படையாக எதிர்ப்பதைக் குறிப்பிட்டு சில அகில இந்திய தலைவர்களிடம் தினகரனுக்காகக் குரல் எழுப்பும்படி கோரிக்கைகளை வைத்து வருகிறது.

இந்த வரிசையில் தினகரன் தரப்பு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியைச் சந்தித்திருப்பதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன. டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி மம்தா பானர்ஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். பெருவாரியான ரெஸ்பான்ஸைப் பெற்றுள்ள அந்த அஞ்சலி செய்தியில், ‘பாஜகவைக் கடுமையாக எதிர்த்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது மோடியை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவதே’ என்று பல பின்னூட்டக் கருத்துகள் இடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை ஆயுதம் மூலமாக மம்தாவை அணுகியிருக்கிறதாம் டிடிவி தினகரன் தரப்பு.

பகிரங்கமாக பாஜகவை எதிர்க்க தினகரன் தயங்கிவந்த நிலையில், மெகா ரெய்டு, இரட்டை இலை தீர்ப்பு போன்றவற்றுக்குப் பிறகு பாஜகவை வெளிப்படையாக எதிர்க்க வேண்டிய கட்டாயம் தினகரனுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதையும் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளவே இப்போது தேசிய அணுகுமுறையைக் கையிலெடுத்திருக்கிறார்.

தினகரன் சார்பாக ஒரு குழுவினர் டிசம்பர் 6ஆம் தேதி கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களையும், மம்தாவுக்கு நெருக்கமானவர்களையும் சந்தித்தனர்.

‘எங்கள் அம்மா போலத்தான் உங்கள் டீடி (மம்தா) பாஜகவைக் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் எங்கள் கட்சியில் சிலர் பாஜகவின் பிடியில் இருப்பதால், தினகரன் மற்றும் சசிகலாவை மத்திய அரசு நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அம்மாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட தொப்பி சின்னம்கூட வழங்கப்படக் கூடாது என்பதிலும் பாஜக தீவிரமாக இருக்கிறது’ என்று சொன்னவர்கள்...

‘தினகரன் தரப்பிடம்தான் அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள். எங்கள் அம்மாதான் பிரதமர் ஆக வாய்ப்பில்லாமல் போய்விட்டது. வருகிற தேர்தலில் மம்தா பிரதமர் ஆக நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். இப்போது பாஜகவின் தாக்குதலில் இருந்து எங்களைக் காப்பாற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்திட வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

தினகரனின் இந்த மூவ் எடப்பாடி அணியினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆர்.கே.நகரில் தனக்கான அந்தஸ்தை தேசிய அளவில் பெற தினகரன் முயற்சிப்பது உள்ளபடியே எடப்பாடிக்குப் புதிய விஷயம்தான். தேர்தல் வெற்றி தோல்வி என்ற நிலையைத் தாண்டி தனக்காகச் சில வலிமையான குரல்கள் ஒலிப்பதைக் காட்ட முயல்கிறார் தினகரன். இந்த முயற்சியை டெல்லியிடம் சொல்லி முறியடிக்கும் வேலைகளிலும் தீவிரமாக இருக்கிறார்கள் எடப்பாடி தரப்பினர். தினகரன் நேற்று வரைக்கும் பாஜகவுக்கு அனுசரனையாகத்தான் இருந்தார், இன்று வேறு வழியில்லாததால் எதிர்க்கிறார் என்பதையும் மம்தாவுக்குக் கொண்டு செல்ல அதிமுகவின் டெல்லி பிரமுகர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம் முதல்வர்.

தினகரனுக்கு ஆதரவாக மம்தா கருத்து சொல்கிறாரோ, இல்லையோ... ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக கொல்கத்தா வரை செல்லும் தினகரனின் முயற்சியை அவரது எதிர்ப்பாளர்களேகூட வியப்பாகப் பார்க்கிறார்கள்.

- ஆரா

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon