மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

சிறப்புக் கட்டுரை: நவம்பர் புரட்சியின் இந்தியத் தாக்கம்!

சிறப்புக் கட்டுரை: நவம்பர் புரட்சியின் இந்தியத் தாக்கம்!

த.நீதிராஜன்

(விடிவெள்ளி வாசகர் வட்டம் நடத்திய நவம்பர் புரட்சி தொடர் கருத்தரங்கில் நவம்பர் 3 அன்று சமர்ப்பித்த கட்டுரையின் சாரம்)

மனித இனத்தில் வர்க்கங்கள் இருக்கின்றன என்பதை எனக்கு முன்பே பலர் கண்டுபிடித்துவிட்டனர். வர்க்கங்கள் மனித சமூகத்தின் ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்தின் வளர்ச்சியோடும் தொடர்பு கொண்டுள்ளவை என்பதைத்தான் நான் கண்டுபிடித்தேன் என்கிறார் காரல் மார்க்ஸ்.

வர்க்கங்களின் போராட்டம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி வரலாற்றைத் தள்ளுகிறது என்கிறது மார்க்சியம். அதைப் புரிந்துகொண்ட ரஷ்ய மக்களின் எழுச்சியே நவம்பர் புரட்சி.

நவம்பர் புரட்சியைத் தலைமை தாங்கி நடத்தியது தோழர் லெனினின் போல்ஷிவிக் கட்சி. அந்தக் கட்சி தனது வரலாற்றை எழுதி வெளியிட்டுள்ளது. ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்றதற்கான காரணங்கள் அதில் பட்டியல் போடப்பட்டுள்ளன.

ரஷ்யாவில் முதலாளித்துவ வர்க்கம் குழந்தைப் பருவத்தில் இருந்தது. அதனால் அது பலவீனமாக இருந்தது. மறுபக்கத்தில் உழைக்கும் மக்களுக்கான தலைமை தத்துவரீதியாக வலிமையாக இருந்தது என்பதும் அந்தக் கட்சி முன்வைக்கும் காரணங்களில் ஒன்று.

நவம்பர் புரட்சியும் இந்தியாவும்

ரஷ்யப் புரட்சியால் கவரப்பட்ட பல இந்தியர்கள் ரஷ்யா சென்று லெனினைச் சந்தித்தனர். அதில் ஒருவர் உத்தரப்பிரதேசத்தின் அப்துர் ரப் என்பவர். தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டிவிட்டால் இந்தியாவில் புரட்சி எழுந்துவிடும் என்று லெனினிடம் அவர் விவாதித்தார் என்கிறார் எழுத்தாளர் இரா.ஜவஹர்.

ஆசிய நாடுகளிலிருந்து ரஷ்யாவுக்கு வந்தவர்களுக்குப் பயிற்சியளிக்க ஒரு பல்கலைக்கழகமே ரஷ்யாவில் தொடங்கப்பட்டது. அதில் மார்க்சியமும் ஆயுதப் பயிற்சியும் வழங்கப்பட்டன. இந்தப் பணிகளை ஒருங்கிணைத்தவர் தோழர் எம்.என்.ராய்.

ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் ‘பக்கிங்காம் அண்டு கர்னாடிக் மில்’லில் (பி&சி) 1918 ஏப்ரல் மாதம் 27இல் ‘சென்னை தொழிலாளர் சங்கம்’ தொடங்கப்பட்டது. அதன்பிறகு தென்னிந்தியாவில் இத்தகைய பல தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டன. தோழர்கள் சர்க்கரை செட்டியார், சிங்காரவேலர் இந்த முயற்சிகளின் மையமாக இருந்தனர். இந்தப் போக்கு வடக்குக்கும் பரவியது.

தாக்கத்தின் தொண்டர் மரபு

இந்தியாவுக்கான கம்யூனிஸ்ட் கட்சியை 1920இல் ரஷ்யாவில் எம்.என்.ராய் உருவாக்கினார். இந்திய மண்ணில் 1925இல் சிங்கார வேலர் தலைமை தாங்கிய கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது என்று இரண்டு நிகழ்வுகள் உள்ளன. இரண்டும் ரஷ்யப் புரட்சியின் குழந்தைகள்தான்.

தோழர்கள் எம்.என்.ராயும் சிங்காரவேலரும் மக்களுக்கான அறிவாளிகள். இந்தியக் கம்யூனிஸ இயக்க வளர்ச்சியில் அவர்களது பங்கு பெரிதும் மேதமை சார்ந்தது. மூளை உழைப்பு சார்ந்தது. அவர்களுக்கு இணையான ஒருவர் உண்டு. அவரது உழைப்பு அர்ப்பணிப்பு மிக்க தொண்டர் பாரம்பர்யத்தின் தோற்றுவாய். இந்திய அரசியல் வானில் மேகங்களாக மிதந்த மார்க்சியத்திலிருந்து நம்மீது பொழிந்த மழையாக அவர் இருந்தார். நமக்குள் விதைகளாகி உயிர்த்தார். அவர்தான் ரஷ்யாவால் பயிற்சி தரப்பட்ட தோழர் அமீர் ஹைதர் கான்.

1930களின் தொடக்கத்தில் சென்னையிலும் வடஇந்தியாவிலும் கட்சியின் அமைப்பை உருவாக்குவதிலும் அதைப் பலப்படுத்துவதிலும் அவர் பெரும்பங்காற்றினார்.

நவீன புரட்சிகர சக்தி

இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை என்ற தனது நூலில்தான் சமூக விடுதலைக்கான போராட்டத்தின் தலைமையைத் தாங்கப்போவது தொழிலாளர் வர்க்கம்தான் என்றார் தோழர் எங்கல்ஸ். “நவீன ஆலைத் தொழிலாளர்கள்தான் புரட்சிகர சக்தி” என்ற கண்ணோட்டம் இதில்தான் ஆரம்பமானது.

பொதுவாக, இந்தக் கண்ணோட்டம்தான் முதல் தலைமுறை கம்யூனிஸ்ட் தோழர்களிடம் இருந்துள்ளது. இந்தக் கண்ணோட்டம்தான் இன்று வரைக்கும் செல்வாக்கோடு இருக்கிறது.

ரஷ்யாவில் தொழிலாளி வர்க்கம் அதிகமாக இருந்ததா, எப்படி அது புரட்சி செய்தது என்பது பற்றி லெனினும் எழுதியுள்ளார். அப்போதேகூட ஒரு ‘விதி மீறல்’ போலத்தான் ரஷ்யப் புரட்சி பார்க்கப்பட்டது.

சீனாவில் நவீன தொழிலாளி வர்க்கம் என்பதே பெரிய அளவில் இல்லாத நிலையில் மாவோ எப்படிப் புரட்சியை வெற்றிபெற வைத்தார் எனும் விவாதமும் உண்டுதான். சீனப் புரட்சியும் ஒரு ‘விதி மீறல்’ போலத்தான் காணப்பட்டது.

ஆனாலும் “நவீன ஆலைத் தொழிலாளர்கள்தான் புரட்சிகர சக்தி” என்ற கண்ணோட்டம்தான் இன்றுவரை செல்வாக்கோடு உள்ளது என்று சொல்லலாம்.

வர்க்கம் - சாதிப் பின்னல்

இந்தக் கண்ணோட்டத்திலிருந்து மாறுபட்ட விதிவிலக்குகளாகத் தஞ்சையில் கூலி விவசாயிகளுக்காக சீனிவாச ராவ், மகாராஷ்ட்டிராவில் வார்லி ஆதிவாசிகளுக்காக கோதாவரி பருலேகர் உள்ளிட்டோர் தலைமையில் நடந்த செயல்பாடுகளைக் காணலாம். அவற்றில் பெரும் மக்கள் ஆற்றல் வெளிப்பட்டதையும் காணலாம்.

இந்தியாவில் உழைக்கும் மக்களைத் திரட்டுவதற்கு சாதி பற்றிய புரிதல் அவசியம் என்ற விவாதம் சமூகத்தின் பல மட்டங்களில் பலவிதமாகக் காணப்படுகிறது.

சாதி என்பது நிலப்பிரபுத்துவ சமூகத்தின் எச்ச மிச்சம். அதாவது, சாதி என்பது வெறும் கருத்துதான் என்போரும் உள்ளனர். சாதி ஒரு வாழ்நிலை என்று வாதிடுவோரும் உள்ளனர். சாதி என்பது வாழ்நிலை என்பதற்கான ஆதாரங்கள்தான் அதிகம் உள்ளன. சாதியைக் கருத்தாகப் பார்க்கிற பார்வை அறிவியல்ரீதியானதல்ல.

சாதியச் சமூகத்தின் இயக்கம்

இந்தியச் சமூகத்தில் வர்க்கமும் சாதியும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இந்தியாவில் வர்க்க சமூகத்துக்கு முந்தியதாக உள்ள நூற்றுக்கணக்கான பழங்குடி இனக்குழுக்கள் உள்ளன. அவை தங்களை சாதிகளாக்கிக் கொள்கின்றன. வர்க்கங்களாக உடைந்து கொள்கின்றன. தங்களை வைசியர், சத்திரியர் என வர்ணித்துக்கொண்டு, வர்ண சமூக முறை எனப்படுகிற ஏணியில் தங்களை ஏற்றிக்கொள்ள முயல்கின்றன. இந்தப் போராட்டத்தில் மோதிக் கொள்கின்றன. இந்தப் போராட்டத்தின் அடித்தளத்தில் மாட்டிக்கொண்டிருக்கிற ஒடுக்கப்பட்ட சாதிகள் மிக கொடூரமாகச் சுரண்டப்படுகின்றன.

முதலாளித்துவ அமைப்பின் சுரண்டலும், நிலப்பிரபுத்துவ அமைப்பின் சுரண்டலும் இந்தியச் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. இந்தியாவின் சாதிய வர்க்க சமூகம் அவற்றால் கடுமையாகப் பாதிக்கப்படவே செய்கிறது. ஆனாலும் அந்தப் பாதிப்புகள் தட்டையானவை அல்ல. சம அளவில் அது அனைவரையும் பாதிப்பதில்லை. தங்கள் மீது ஏவப்பட்டுள்ள சுரண்டலுக்கு எதிர்வினையாற்றுவதில் ஒவ்வொரு சாதியும் தனக்கே உரிய தன்மையில் எதிர்வினையாற்றுகிறது.

கணிசமான சாதிகள் ஒரே நேரத்தில் சுரண்டும் சாதிகளாகவும் சுரண்டப்படும் சாதிகளாகவும் இருப்பதால் சுரண்டல் செயல்படும் முறையேகூட இடியாப்பச் சிக்கலில் நிகழ்கிறது.

இவற்றில் ஒடுக்கப்பட்ட சாதிகளின் வாழ்நிலையிலிருந்து எழும் சாதி உணர்வுகள் விடுதலை உணர்வுகள். அவை ஜனநாயக உணர்வுகள்.

ஆதிக்கச் சாதிகளின் வாழ்நிலையிலிருந்து எழும் ஆதிக்க உணர்வுகள் ஜனநாயக விரோதமானவை. மனிதர்களுக்கு இடையே உள்ள சகோதரத்துவ உறவை அவை சீர்குலைப்பதால் அவை சமூக விரோதமானவை.

கம்யூனிஸ இயக்கத்தின் சுய சிந்தனை

ரஷ்ய பாணியில் அல்லாமல் சீனத்திலும் வியட்நாமிலும் தமக்கே உரிய பாணியில் வர்க்கப் போராட்டமும் உழைக்கும் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதும் நடைபெற்றுள்ளன.

இந்தியாவிலும் இந்திய சமூகத்தின் தனித்தன்மையை புரிந்துகொள்வதில் முக்கியமான பங்களிப்புகள் நடந்துள்ளன. அறிவுரீதியான, கோட்பாட்டுரீதியான பங்களிப்புகள் குறைவாகக்கூட இருக்கலாம். ஆனாலும், உணர்ச்சிரீதியான பங்களிப்புகளைச் செலுத்தியவர்களாக கம்யூனிஸ்ட்கள் திகழ்கிறார்கள்.

தெலங்கானா, மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் மக்களிடம் நெருக்கமான உறவுகள் ஏற்படும் அளவுக்கு கம்யூனிஸ்ட்கள் தங்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செலுத்தியிருப்பதால் மக்களின் நம்பிக்கையைப் பெற்றனர்.

நிலப்பிரபுத்துவ சமூகத்தோடு சமரசம் செய்துகொண்டு இந்திய முதலாளித்துவம் வளர்கிறது. ஐரோப்பாவில் நடந்தது போல நிலப்பிரபுத்துவத்தின் அழிவில் இந்தியாவில் முதலாளித்துவம் வளரவில்லை என்ற நிர்ணயிப்பு கம்யூனிஸ இயக்கத்தின் சுய சிந்தனையின் முக்கியமான சாதனை.

தலித்துகள், பழங்குடிகள் மீதான சாதிய வன்கொடுமைகளை வர்க்க ஒடுக்குமுறையாகக் கருதி எப்போதும் உணர்ச்சிரீதியான முறையில் எதிர்த்து போராடித்தான் வந்திருக்கிறது கம்யூனிஸ்ட் இயக்கம்.

ஒரு தலித் தொழிலாளி மீது வர்க்க ஒடுக்குமுறையோடு சாதிய ஒடுக்குமுறையும் கூடுதலாக இருக்கிறது என்ற கோட்பாட்டையும் சமீப ஆண்டுகளில் அது உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக இன்று தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் பல முன்னணிகள் இந்திய மாநிலங்களில் உருவாகிவருகின்றன. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுகிற போரில் சில மாநிலங்களில் முன்னணியில் நிற்கிறது. தலித் பெண் தொழிலாளி மீது பாலின ஒடுக்குமுறையும் கூடுதலாக இருக்கிறது என்ற புரிதலும் வலுவடைந்தே வருகிறது.

சாதிய ஒடுக்குமுறை பற்றிய புரிதலில் கம்யூனிஸ இயக்கம் முன்னேறினாலும் இந்திய சமூகத்தின் சாதியக் கட்டுமானத்தை ஆராய்வதில் அது இன்னமும் போதுமான சாதனையைச் செய்யவில்லை. அப்படிச் செய்யாதிருப்பதால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? இந்திய யதார்த்தத்தை இந்திய மார்க்சிய அமைப்புகள் எப்படி எதிர்கொள்கின்றன?

அலசுவோம்...

(கட்டுரையின் இறுதிப் பகுதி நாளைக் காலை 7 மணிப் பதிப்பில்)

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: த.நீதிராஜன், இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர். தீக்கதிர், தி இந்து தமிழ் ஆகிய இதழ்களில் பணிபுரிந்தவர். சமூக மாற்றத்துக்கான களப்பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். காய்தேமில்லத் சர்வதேச ஊடகவியல் கல்வி நிறுவனத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணிபுரிகிறார். ‘அணையா வெண்மணி’ என்னும் சமூக நீதிக்கான காலாண்டிதழின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றுள்ளார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon