மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

சிம்பு - தனுஷ் சர்ச்சை: அதைப்பத்தி பேசாதீங்க!

சிம்பு - தனுஷ் சர்ச்சை: அதைப்பத்தி பேசாதீங்க!

தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வாக சக்க போடு போடு ராஜா திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. இரு எதிரெதிர் துருவங்கள் எனப்பட்ட சிம்பு - தனுஷ் ஆகியோர் ஒரே மேடையில் நின்று பேசி தங்களுக்கிடையே ஒன்றுமில்லை என்று ரசிகர்களுக்கு நிரூபித்திருக்கிறார்கள். இது ஏன் இந்தப் படத்தின் விழாவில் நடைபெற்றது? ஏனென்றால், இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சிம்பு!

டி.ராஜேந்தரை போலவே சிம்புவும் இப்போது ஆல்-ரவுண்டராக தன்னை சினிமாவில் முன்நிறுத்தி வருகிறார். அதன் நீட்சியாகவே இப்போது இசையமைப்பாளர் என்ற புதிய முகமூடியை அணிந்திருக்கிறார். இதைத்தான் தனுஷும் சொன்னார். தனுஷ் துள்ளுவதோ இளமை திரைப்படத்துக்காக நடனம் பயின்றபோது, சிம்பு நடனமாடும் காட்சியைப் போட்டுக்காட்டி இந்த மாதிரி ஆடவேண்டும் என்று நடன ஆசிரியர் சொல்ல, ‘அவர் சினிமாவுக்காகவே பொறந்தவர். நான் பொழப்புக்கு சினிமா வந்தவன். என்னால அப்படியெல்லாம் ஆட முடியாது’ என்று சொன்னாராம் தனுஷ். இதை விழா மேடையில் சொன்னார். ஆனால், அதைப்பற்றி எழுதி விழாவுக்குக் கவனம் கொடுக்காமல் விட்டுவிடக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறார்.

“நம்முடன் வெற்றி பெறவோ, நம்மால் வெற்றி பெறவோ நினைப்பவர்கள் நண்பர்கள் அல்ல. பிரச்னை வரும்போது உடன் நிற்பவர் தான் நண்பர். எனக்கு அவர் நின்றிருக்கிறார். அவருக்கு நான் நின்றிருக்கிறேன். எப்போதும் இருவருக்குள் பிரச்னை வராது. இருவருக்கும் நடுவில் இருப்பவர்கள்தான் பிரச்னை செய்வார்கள். அவர்களைச் சொல்லி என்ன செய்வது பாவம்” என்று படத்தின் இசை வெளியீட்டுக்கு தொடர்பே இல்லாமல் பேசிவிட்டு “சந்தானம் நன்றாக நடித்திருக்கிறார். பொல்லாதவன் ஷூட்டிங்கில் இவரைப் பார்த்தபோதே வெற்றிமாறனிடம் கூறினேன். ஒரு ரவுண்டு வருவார் என்று. இப்போது செகண்டு ரவுண்டுக்கு ரெடியாகிட்டார்” என்று சொல்லியிருக்கிறார் தனுஷ். இவர் பேசியதிலேயே முக்கியமான தகவல் “நான் உங்களிடம் எதையும் எதிர்பார்க்காதது போலவே, இந்த ரசிகர்களும் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. அதற்குப் பரிசாக வருடத்துக்கு இரண்டு படம் கொடுங்கள். இது உங்கள் கடமை” என்று அறிவுரை சொன்னவர் தனுஷ்.

சிம்பு பேசியபோது தனுஷின் கேள்விகளுக்குப் பதில் சொல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யோசித்து வைத்திருந்ததை மறக்காமல் பேசிவிட்டுத்தான் இறங்கினார். ரெட் கார்டு போட்டு மணிரத்னம் படத்தில் நடிக்கவிடாமல் செய்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று சொல்லி அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், இரண்டாவது பிரச்னையான AAA திரைப்படம் தோல்வி என ஒப்புக்கொண்டார். இரண்டு பாகங்களாகப் படம் நடிக்கலாம் என்று எடுத்த முடிவை நினைத்து வருத்தப்படுவதாகக் கூறினார். திடீரென தொடர்பே இல்லாமல், “சினிமாவிலிருந்து என்னைப் பிரிக்கலாம். ஆனால், என் ரசிகர்களிடமிருந்து என்னை பிரிக்க முடியாது” என்று மிகவும் எமோஷனலானார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon