மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

நிவாரணப் பணிகளுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்!

நிவாரணப் பணிகளுக்கு  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் ஏற்பட்ட நிவாரணப் பணிகளுக்காக ஒன்பது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 30ஆம் தேதி உருவான ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. மின்கம்பங்களைச் சீரமைக்கவும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடவும் மாநில அரசு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் குமரி மாவட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளது

இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

‘குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கியதால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்யவும், மீட்புப் பணிகளை முடுக்கிவிடவும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஒன்றியங்களுக்கும் தனித்தனியாக ஐ..ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு ஜோதி நிர்மலா, தோவாளை ஒன்றியத்துக்கு ராஜேந்திர குமார், ராஜாக்கமங்கலம் ஒன்றியத்துக்கு பாஸ்கரன், குருந்தன்கோடு ஒன்றியத்துக்கு ககன்தீப் சிங்பேடி, கிள்ளியூர் ஒன்றியத்துக்கு கோபால், தக்கலை ஒன்றியத்துக்கு ராமச்சந்திரன், திருவட்டார் ஒன்றியத்துக்கு பிரகாஷ், மேற்புறம் ஒன்றியத்துக்குச் சந்திர மோகன், முன்சிறை ஒன்றியத்துக்குத் தண்டபாணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர சாய் குமார், நசிமுதீன் ஆகியோரும் இப்பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் அந்தந்த ஒன்றியத்திலும், பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் மூலமும் நடைபெறும் நிவாரணப் பணிகள், மீட்புப் பணிகளை முடுக்கிவிடுவார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon