மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

சட்டப் படிப்பு பார்சல்...

சட்டப் படிப்பு பார்சல்...

இருட்டறையில் ஒரு விளக்கு -3

வழக்கறிஞர் தொழிலின் மேன்மை குன்றியதற்கு உதாரணமாக பாரிஸ்டர் ரஜினிகாந்த்தில் இருந்து வண்டு முருகன் வரை உதாரணம் பார்த்தோம். இந்த நிலைக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

வழக்கறிஞர்களுக்குச் சமூகத்தில் மட்டுமல்ல, நமது அரசியல் அமைப்பே தலைவணங்குகிறது. இந்திய அரசியல் அமைப்பு சாசனம் என்பது ஒரு தொழிலை அங்கீகரித்திருக்கிறது என்று சொன்னால் அது வழக்கறிஞர் தொழிலை மட்டும்தான். பப்ளிக் பிராஸிக்யூட்டர், அட்டர்னி ஜெனரல், அட்வகேட் ஜெனரல், நீதிபதிகள் என்று நமது அரசியல் அமைப்பு சாசனம் வரையறை வழங்கியிருக்கிற தொழில் என்றால் அது வழக்கறிஞர் என்ற நிலைதான். வேறு எந்த தொழிலுக்கும் இது மாதிரியான அங்கீகாரம் இல்லை.

இந்தியாவின் ஒட்டுமொத்த சிஸ்டம் எனப்படும் அரசியல் அமைப்பையும் ஒழுங்குபடுத்தவும் முறைப்படுத்தவும் கூடிய பெரியதொரு பெருமையும், கடமையும் வழக்கறிஞர் தொழிலுக்கு மட்டும்தான் இருக்கிறது.

அதனால்தான் வழக்கறிஞர்கள் சமூகத்தில் மிக முக்கிய மனிதர்களாக இருக்கிறார்கள். அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் சமூகத்தில் மிகப் பெரிய மரியாதையும் மதிப்பும் கிடைத்துவந்தது. நீண்ட நெடுங்காலமாக வழக்கறிஞர்களுக்குக் கிடைத்து வந்த மதிப்பு மரியாதையும் கடந்த பதினைந்து ஆண்டுகளாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வந்திருக்கிறது.

இதற்குக் காரணம் என்ன?

மூத்த வழக்கறிஞர் வேல்முருகன் தொடர்ந்து பதில் சொல்கிறார்.

வழக்கறிஞர்களின் கறுப்பு அங்கி என்பதற்கு இந்திய சமூகத்தில், தமிழக சமூகத்தில் இருக்கும் நற்பெயர், அந்தஸ்து, பாதுகாப்பு ஆகியவற்றை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக பலர் இப்போது புறப்பட்டுவிட்டனர். அதாவது, இவர்களின் நோக்கம் சட்டம் கற்று சட்ட நெறிகளைக் கற்று, சட்டம் பற்றி வாதாடி வழக்குகளில் வெற்றி கொள்வதல்ல.

அரசியல் சட்டம் வழக்கறிஞர்களுக்குக் கொடுத்துள்ள அந்த அங்கீகாரத்தை வேட்டையாடுவதற்காக... இப்போது குற்றவாளிகள்கூட நானும் சட்டம் படித்தேன் என்று சொல்லிக் கொண்டு வழக்கறிஞர் என்ற பட்டத்தை கேடயமாகப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

இதற்கு அச்சாரம் போட்டுக்கொண்டிருப்பவை எவை தெரியுமா? நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருக்கும் தனியார் சட்டக் கல்லூரிகள்தான்.

இங்கே ஒரு விஷயத்தை அழுத்தமாகக் குறிப்பிட்டாக வேண்டும். தமிழகத்தில் நேர்மையான ஒழுக்கமான, திறமையான வழக்கறிஞர்கள் பலர் இந்தத் துறைக்கென கிடைத்து மின்னியதற்குக் காரணம் இங்கே தனியார் சட்டக் கல்லூரிகள் இல்லாததுதான். அதேநேரம் பக்கத்து மாநிலங்களில் இருக்கும் தனியார் சட்டக் கல்லூரிகள்தான் கடந்த பத்து, பதினைந்து வருடங்களில் வழக்கறிஞர் என்ற தொழிலின் மாண்பு மாசுபட்டதற்குக் காரணம்.

தமிழகத்துக்கு என்று வழக்கறிஞர்களை வருடா வருடம் அள்ளித் தரும் அந்த தனியார் சட்டக் கல்லூரிகள் எப்படி இயங்குகின்றன தெரியுமா?

குடிசைத் தொழில் போன்று ஒரு டெண்ட்டுக்குள், 100க்கு 100 அடி இடத்தில் போர்டு மட்டுமே வைத்துக்கொண்டு வேறு எந்தவித உள்கட்டமைப்பும் இல்லாமல் ‘பெயருக்கு’ இயங்கிக் கொண்டிருப்பவைதான் தனியார் சட்டக் கல்லூரிகள். ஆனால், இந்த தனியார் சட்டக் கல்லூரிகள்தான் தமிழகத்துக்கு எண்ணற்ற வழக்கறிஞர்களை உற்பத்தி செய்கின்றன.

தனியார் சட்டக் கல்லூரிகளைக் குற்றம் சுமத்துக்குவதற்குக் காரணம் இருக்கிறது. அங்கே சட்டம் பயிற்றுவிக்கப்பட்டால் பரவாயில்லை. அங்கே போய் சட்டம் படிக்காதீர்கள் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், சட்டத்தைப் படித்துவிட்டு வாருங்கள், திறமையான சட்டப் பேராசிரியர்களிடம் பாடம் பயின்று வாருங்கள் என்றுதான் சொல்கிறோம்.

ஆனால், நமது அண்டை மாநிலங்களில் இருக்கும் சட்டக் கல்லூரிகளில் சட்டம் கற்பிக்கப்படுகிறதா என்ன?

வருடம் முழுவதும் தமிழகத்தில் இருந்துவிட்டு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால் சட்டத்தில் பட்டப் படிப்பு முடித்தார்கள் என்று சான்றிதழ்கள் கொடுக்கிற தனியார் சட்டக் கல்லூரிகளைக் கண்கூடாகப் பலருக்குத் தெரியும்.

தினம் தினம் கல்லூரி சென்று திறமையான சட்டப் பேராசிரியர்களிடம் சட்டம் பயின்று... அதன்பின் திறமையான வழக்கறிஞர்களிடம் நீதிமன்ற நடவடிக்கைகள் பழகி ஒருவர் வழக்கறிஞராகப் பதிவு செய்தால் அந்த வழக்கறிஞரை வரவேற்கலாம்.

ஆனால், தமிழ்நாட்டில் ஒரு தொழில் செய்துகொண்டு அது சட்ட விரோதத் தொழிலாகக்கூட இருக்கும்... அப்படி ஒரு தொழில் செய்துகொண்டு தன்னை சட்டத்திடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, அதே சட்டத்தைத் தானும் படித்திருக்கிறேன் என்று காட்டிக் கொள்பவர்களுக்கான கருவியாகவே இருக்கின்றன அண்டை மாநிலங்களில் இருக்கும் தனியார் சட்டக் கல்லூரிகள். சட்டம் என்ற புனிதமான, ஒழுக்க நெறி சார்ந்த, அறிவு சார்ந்த பட்டப் படிப்பை மலினமான பார்சல் பண்டங்களாக மாற்றியது அவைதான்.

தமிழகத்தில் வண்டு முருகன் என்ற பிம்பம் குடிகொண்டதற்குக் காரணமே இந்த முறையற்ற தனியார் சட்டக் கல்லூரிகள்தான்.

இவற்றை முறைப்படுத்த நீதித்துறை எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லையா?

இந்தக் கேள்விக்கு மூத்த வழக்கறிஞர் வேல்முருகன் சொல்லும் விளக்கத்தைப் பார்ப்போமா?

(விளக்கு ஒளிரும்)

மினி தொடர்: இருட்டறையில் ஒரு விளக்கு!

பாரிஸ்டர் ரஜினிகாந்த் டு வண்டு முருகன்கள்

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon