மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

சிறப்புக் கட்டுரை: வெகுளித்தனமான நம்பிக்கையில் ஓங்கிக் குட்டிய டிசம்பர் 6!

சிறப்புக் கட்டுரை: வெகுளித்தனமான நம்பிக்கையில் ஓங்கிக் குட்டிய டிசம்பர் 6!

அ. குமரேசன்

(பாபர் மசூதி இடிக்கப்பட்டு நேற்றோடு (டிசம்பர் 6) 25 ஆண்டுகள் நிறைகின்றன. இந்த நிகழ்வு இந்திய அரசியல், சமூக, பண்பாட்டுக் களங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்த பன்முக அலசல்களை மின்னம்பலம்.காம் தொடராக வெளியிடவிருக்கிறது. அந்த வரிசையின் இரண்டாம் கட்டுரை இது – ஆசிரியர்)

அந்த நாளில் பத்திரிகையாளர்களில் ஒருவனாக நிகழ்வுகளைக் குறிப்பெடுத்துக்கொண்டு இருந்தேன். அதேவேளையில் குடிமக்களில் ஒருவனாக எப்படியாவது அது தடுக்கப்பட்டுவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடும், தடுக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையோடும் செய்திகளைக் கவனித்துக்கொண்டிருந்தேன். ஆனால், அந்த 1992 டிசம்பர் 6, இரண்டு விளைவுகளை ஏற்படுத்தியது. ஒன்று, பல ஆண்டுகளாக வகுக்கப்பட்டிருந்த அயோத்தி பாபர் மசூதி இடிப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இன்னொன்று, 36 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பாபா சாஹேப் அம்பேத்கர் நினைவு நாள் கடத்தப்பட்டது.

விடுதலைப் போராட்டத்தின்போது, சுதந்திர இந்தியா முழுச் சுதந்திரம் அடைந்துவிடாமல், ஒற்றை மதத்தின் ஆதிக்கத்தில் இந்து நாடாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்ட சக்திகள், தங்கள் நோக்கம் நிறைவேறவில்லை என்பதால் ஓய்ந்துவிடவில்லை. மதச்சார்பற்ற நாடாக உருவெடுத்த சுதந்திர இந்தியாவை அப்படி ஒற்றை மத இந்தியாவாக மதமாற்றம் செய்வதற்காகத் தொடர்ந்து பல முனைகளில் முயன்றுவந்தனர். மதம் மட்டுமே உயர்ந்த இலக்கு, அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தை ஒரு பகுதி மக்களிடையே பதியமிடுவதில் அவர்கள் வெற்றிபெற்றனர்.

அந்த வெற்றிக்கு ஆர்எஸ்எஸ் தலைமையிலான அமைப்புகளின் விடாத பரப்புரைகளும் களச் செயல்பாடுகளும் பெருமளவுக்குக் காரணம். நாட்டை ஆண்டுவந்த காங்கிரஸ் தலைமையின் செயல்பாடுகள், மதவாத சக்திகளோடு செய்துகொண்ட சமரசங்கள் ஆகியவையும் காரணம்தான். ஷாபானு வழக்குத் தீர்ப்பைத் தொடர்ந்து ஷரியத் சட்டத்துக்கு ராஜீவ் காந்தி அரசு அளித்த அங்கீகாரம், இது முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தும் போக்கு என்று கொந்தளித்த இந்துத்துவ அமைப்புகளைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கையாக, அதுவரையில் பூட்டப்பட்டிருந்த பாபர் மசூதியின் ஓர் அறையைத் திறந்துவிட்ட அதிகாரம் என அந்த சமரசத்தை அடையாளம் காணலாம். (1949இல் ஓர் அமைப்பினரால் ராமர் சிலை வைக்கப்பட்டு, அன்றைய பிரதமர் நேருவின் ஆணைப்படி மூடப்பட்ட அறை அது.)

மதச்சார்பின்மை என்பதைக் கொச்சையாக அர்த்தப்படுத்தி, அரசுத் துறை வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒவ்வொரு நாள் காலையிலும் எல்லா மதங்களிலிருந்தும் பக்திப் பாடல்கள் ஒலி / ஒளிபரப்பப்பட்டது இந்த சமரசத்தின் ஒரு பகுதிதான். வடமாநிலங்களில் பகுத்தறிவு, சமத்துவ இயக்கங்கள் வலுவாகக் காலூன்றாத நிலையையும் ஒரு காரணமாகக் குறிப்பிடலாம்.

எல்லா மதங்களிலுமே இறை நம்பிக்கை, பக்தி வழி, மக்களை ஒருமுகப்படுத்தும் அறிவுரைகள், அவற்றை மனதில் பதிக்கும் கதைகள், நிறுவன அமைப்புகள் என்று இருக்கின்றன. இந்து மதத்திலும் இவையெல்லாம் இருக்கின்றன. கூடுதலாக, மனிதர்களை ஏற்றத்தாழ்வாக வைக்கிற சாதியக் கட்டமைப்பையும் சாதியப் பாகுபாடுகளையும் பாதுகாக்கும் தத்துவமும் மையமாக இருக்கிறது. சுதந்திர இந்தியா இந்து நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதை எதிர்த்தவர்கள், அப்படி அறிவிக்கப்பட்டால், அது இந்து மத வழிபாட்டு நம்பிக்கைகளை அதிகாரபூர்வமாக்குகிற நாடாக மட்டும் இருக்காது; வர்ணம் - சாதி என்ற அடிப்படையில் குடிமக்களைப் பாகுபடுத்துகிற நாடாகவும் இருக்கும் என்ற புரிதலோடு அதைத் தடுக்க முயன்றார்கள். இறை நம்பிக்கையற்றவர்கள் மட்டுமல்ல, காந்தி உள்ளிட்ட இந்து நம்பிக்கையாளர்களும் சேர்ந்து அதைத் தடுத்தார்கள் என்பதே சுதந்திர இந்தியாவின் பெருமை. அப்படித் தடுத்தவர்களில் முக்கியமானவரான அம்பேத்கரின் சாதி ஒழிப்புச் சிந்தனைகளை டிசம்பர் 6 அன்று நினைக்கவிடாமல் தடம் மாற்றியது தற்செயலானதுதானா?

அன்றைய அயோத்தியின் கள நிலவரம்

கால் நூற்றாண்டுக்கு முன் இன்றைய ஊடக வளர்ச்சிகள் இல்லாத அந்த நாளில் அயோத்தியின் கள நிலவரம் பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் இருந்தது. மறுநாள் காலை நாளேடுகள் அனைத்தும் செய்தியை விரிவாக வெளியிட்டிருந்தன. “பாபர் மசூதி கோபுரங்கள் இடிப்பு, அயோத்தியில் பதற்றம்” என்ற தொனியில்தான் பெரும்பாலான ஏடுகளில் செய்தி வெளியாகியிருந்தது. சில நாளேடுகளில் அவற்றின் அரசியல் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் வகையில், “பாபர் மசூதி தகர்ப்பு, மத வெறியர்கள் அட்டூழியம்” என்ற தலைப்பிடப்பட்டிருந்தது. “பாபர் மசூதி தகர்ப்பு, ராம பக்தர்கள் ஆவேசம்” என்று தலைப்பிட்ட நாளேடும் உண்டு.

உலகத்திலும் இந்தியாவிலும் ஏற்படுகிற அரசியல் - சமூக மாற்றங்கள் பொதுவாக முற்போக்கான திசையில்தான் நிகழ்கின்றன என்ற வெகுளித்தனமான நம்பிக்கையில் இருந்தவன் நான். இந்தியச் சமுதாய மனசாட்சி இங்கொரு மதவாத அரசியலை அனுமதிக்காது; அதை நிறுவ முயல்கிறவர்களை அங்கீகரிக்காது என்றும் நம்பியிருந்தேன். என் தலையில் ஓங்கிக் குட்டி உண்மை நிலைமைகளைக் காண வைத்தது பாபர் மசூதி தகர்ப்பு.

அதைத் தொடர்ந்து கடவுளைக் காக்கப் புறப்பட்டவர்களால் நாடு முழுவதும் கொடுக்கப்படட ரத்த பலிகள் எத்தனை! வெடிகுண்டுகளால் சிதறிய அப்பாவி மக்களின் உடல்கள் எத்தனை! புள்ளிவிவரங்களைத் தொகுத்தால் இந்த ஒரு கட்டுரை போதாது. அவர்கள் இப்படிச் செய்தார்கள், பதிலுக்கு இவர்கள் இப்படிச் செய்தார்கள் என்று கணக்கு நேர் செய்கிற பிரச்னை அல்ல இது. பழிவாங்கல், பழிக்குப் பழிவாங்கல் என்று இன்று வரையில் தொடர்கிற மதவெறி சார்ந்த வன்முறையாட்டங்கள் அனைத்திலும் அந்த டிசம்பர் 6 ஒரு மைய முடிச்சாக இருப்பது உண்மை. ஒருபக்கம், வேறு எந்த ஊர்களிலெல்லாம் இடித்துக் கோயில் செய்வதற்கான பள்ளிவாசல் தலங்கள் இருக்கின்றன என்று பட்டியல் போட்டு வன்முறைப் பாதைகள் அமைக்கப்படுகின்றன.

நீதிமன்றம்கூட, இழந்தவர்களின் பக்கம் நியாயம் வழங்குவதற்கு மாறாக, 450 ஆண்டு கால மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில், அதை அவர்களிடம் முழுமையாக ஒப்படைப்பதற்கு மாறாக, மூன்று பங்காகப் பிரித்து எடுத்துக்கொள்ளத் தீர்ப்பளித்தது. பாபர் மசூதி இடிப்பு வழக்கோ இன்னமும் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இளைஞர்களின் விபரீத மனப்போக்கு

இன்னொருபக்கம், சிறுபான்மையினர் கருத்தியல் தாக்குதல்களுக்கும் நேரடி வன்முறைகளுக்கும் உள்ளாகிறபோது, நாட்டின் மதச்சார்பின்மைக்காகவும் மக்களின் ஒற்றுமைக்காகவும் நிற்பவர்களோடு இணைவதற்கு மாறாக, மதத்தின் பெயரால் பயங்கரவாதச் செயல்களைத் திட்டமிடுகிற கும்பல்களோடு ஒரு சிறு பகுதி இளைஞர்கள் தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள். மறுமையின் பரிசுகளுக்காக இம்மையில் இதர மதத்தினரை வதைப்பது புனிதச் செயல் என்று நம்பவைக்கப்பட்டவர்கள் அவர்கள். உலக அளவில் இஸ்லாமிய அரசை நிறுவுகிற நோக்கத்துடன், அதற்காகப் பிறரை அழிப்பதில், தன்னைத் தானே அழித்துக்கொள்வதில் தவறில்லை என்ற எண்ணத்துடன் சதிகளிலும் தாக்குதல்களிலும் ஈடுபடுகிறவர்கள் இவர்களை ஓர் இயக்கமாகவே ஈர்க்கிறார்கள். அவர்களது ஈவிரக்கமற்ற படுகொலைகள், இந்தியாவில் அதைக் காட்டியே இந்து மதவாத அரசியலை வலுப்படுத்த முயல்வோருக்குப் பயன்படுகின்றன. ஆம், உள்நாட்டுப் பெரும்பான்மை மதவாதம் சிறுபான்மை மதவாதத்துக்கும், உள்நாட்டுச் சிறுபான்மைவாதம் பெரும்பான்மை மதவாதத்துக்கும் ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கின்றன.

இந்தியாவில் 90களுக்குப் பிறகு தீவிரமாகிய பெரும்பான்மை மதவாத ஆதிக்க முயற்சிகளாலும் தாக்குதல்களாலும், சிறுபான்மை மதங்களில் தங்களது அடையாளங்களைப் பாதுகாக்கும் முனைப்பு தீவிரமாகியது. ஓர் அச்சத்திலிருந்தும் அடையாளப் பாதுகாப்பு பற்றிய கவலையிலிருந்தும் தீவிரமடைந்த முனைப்பு அது. இதனால் அவர்களிடையேயே உரையாடல்களுக்கும் விமர்சனங்களுக்கும் சீர்திருத்தங்களுக்குமான வெளி சுருங்கியிருக்கிறது. தங்களுடைய மறைநூல்களில் எல்லாமே சரியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன, வழிமுறைகள் எல்லாமே சரியாகப் பின்பற்றப்படுகின்றன என்பதாக நியாயப்படுத்திப் போர்த்திக்கொள்ளும் போக்கு அதிகரித்திருக்கிறது.

எடுத்துக்காட்டாக, இந்துத்துவவாதிகளின் உடனடித் தாக்குதலுக்கு இலக்காகும் இஸ்லாமிய சமூகத்தில் தங்கள் அடையாளப் பாதுகாப்புக்கான பதற்றம் அதிகரித்ததன் பின்னணியில், முத்தலாக், அரபு மொழி வழிபாடு, பெண்ணை முழுவதுமாக மறைக்கும் அங்கி, ஆண்களுக்கான சுன்னத் போன்றவை மதத்தின் பெயரால் புனிதப்படுத்தப்படுகின்றன. சீர்திருத்தங்களுக்கான தன்முனைப்பு இஸ்லாமியர்களிடையே அறவே இல்லை என்று சொல்ல முடியாது என்றாலும் போதுமான அளவுக்கோ வெளிப்படையாகவோ இல்லை எனலாம். இதைக் காட்டியே, “அவர்களுடைய பழக்க வழக்கங்களை விமர்சிக்கிற துணிவும் நேர்மையும் இந்தப் பகுத்தறிவாளர்களுக்கும் முற்போக்காளர்களுக்கும் இல்லாமல் போனது ஏன்?” என்று பெரும்பான்மை மதவாதப் பரப்புரையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அப்படிக் கேள்வி எழுப்புவதன் நோக்கம் பதில் பெறுவதல்ல, தங்களைப் பின்பற்றுவோரின் மனதில் சிறுபான்மையினருக்கு எதிரான உணர்வு வடிந்துவிடாமல் பார்த்துக்கொள்வதே.

இரட்டைமுனைத் தாக்குதல்கள்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலகட்டமும், இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் சீர்குலைப்புக்கான உலகமய – தனியார்மய - தாராளமயக் கொள்கைகள் புகுத்தப்பட்டதும் தற்செயலானதாக இருக்கக்கூடும். ஆனால், பொருளாதாரத்தின் மீதான மூர்க்கத் தாக்குதல்களுக்கு எதிராகத் திரண்டுவிடாமல் மக்களின் ஆற்றாமையையும் ஆத்திரத்தையும் மடை மாற்றுவதற்கு, பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய மதவாத அரசியல் சூழல் பயன்படுத்தப்படுவது தற்செயலானதல்ல.

இந்தியாவின் முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டுமானத்தோடும் இதை இணைத்துப் பார்க்கலாம். பொதுவாக உலகின் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், அங்கெல்லாம் நிலப்பிரபுத்துவம் வேரறுக்கப்பட்ட அடிவாரத்தில்தான் முதலாளித்துவம் கட்டப்பட்டது என்பதைக் காணலாம். அப்படி நிலப்பிரபுத்துவம் அழிக்கப்படுவது முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஒரு அடிப்படைத் தேவையாகவும் இருந்தது. அந்த நாடுகளின் அரசியல் முடிவுகளில், பொருளாதாரச் செயல்பாடுகளில் முன்போல் திருச்சபைகள் தலையிட முடிவதில்லை. நிலப்பிரபுத்துவத்தின் பிடியிலிருந்து விடுபட்டதன் முக்கியமான வெளிப்பாடு இது.

இந்தியாவிலும் நிலப்பிரபுத்துவம் வேரறுக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. வரலாற்றின் பக்கங்களில், நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்ட சில நாடுகளில் சமத்துவ ஆட்சி நிறுவப்பட்ட அத்தியாயங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. அதனால் விழித்துக்கொண்டது போல, சுதந்திர இந்தியாவில் முதலாளித்துவத்தால் சில சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டனவேயன்றி, நிலப்பிரபுத்துவத்தின் மீது கை வைக்கப்பட்டதில்லை. அடிப்படையான முரண்பாடுகள் நீடித்தபோதிலும், முதலாளித்துவம் இங்கே நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துகொண்டது, கைகோத்துக்கொண்டது. இன்றளவும் அரசுக் கட்டமைப்புகள் உட்பட மதவெறி, சாதிய ஆணவம், ஆணாதிக்க வன்மம் ஆகியவை பல்வேறு வகைகளில் தாண்டவமாடுவது நிலப்பிரபுத்துவத்தின் பிடியிலிருந்து விடுபடாததன் வெளிப்பாடேயாகும்.

தொண்ணூறுகளுக்குப் பிந்தைய இந்த தீவிர வலதுசாரித் திருப்பம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே நிகழ்ந்து வந்திருக்கிறது. பல நாடுகளில் மன்னராட்சிக்கும், முதலாளித்துச் சுரண்டல்களுக்கும் எதிரான கிளர்ச்சிகள் நடக்கின்றன. ஆனால், வல்லரசுகளின் ஆதிக்கத்துக்கு எதிராக, குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எல்லை மீறல்களுக்கு எதிராக வெடிக்கும் அந்தக் கிளர்ச்சிகளை முன்னெடுப்பது இடதுசாரிகளோ, முற்போக்கு இயக்கங்களோ அல்ல, மதவாத அமைப்புகள்தான் முன்நிற்கின்றன. அந்த நாடுகளின் மக்கள் முற்போக்கான மாற்றங்களுக்கான காற்றைச் சுவாசிக்க முடியாதவர்களாக அலைக்கழிக்கப்படுகிறார்கள். அங்கெல்லாம் வலதுசாரி மதவாத அமைப்புகள் நவீன துப்பாக்கிகளோடு அரசியல் களமாடிக்கொண்டிருப்பது, ஏகாதிபத்தியம் தனது தலையீடுகளைத் நியாயப்படுத்தத் தோதாக இருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டு பிறந்த ஒரே ஆண்டில், அந்த ‘9/11’ தாக்குதலில், நியூயார்க்கின் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரக் கட்டடத்தின் மீது ஒசாமா பின் லேடனின் விமானம் பாய்ந்தது, ஏகாதிபத்தியம் பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய யுத்தம் என்று அறிவித்து ஆக்கிரமிப்பு அத்துமீறல்களைக் கெட்டிப்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக அமைந்ததல்லவா?

தொண்ணூறுகளுக்குப் பிந்தைய உலகளாவிய நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும். ஆய்வாளர்கள் மட்டுமல்லாமல் அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் மாற்றங்களுக்காகக் களமாடுகிறவர்கள் எல்லோருமே அக்கறை கொள்ள வேண்டிய ஆராய்ச்சிகள் அவை. அந்த நிகழ்ச்சிப் போக்குகளின் தாக்கத்திலிருந்து இந்தியா தனித்திருக்க முடியவில்லை. அதேபோல், மாற்றங்களுக்காக உலக அளவில் நடைபெறும் மானுட இயக்கத்திலிருந்தும் இந்தியா தனித்திருக்க முடியாது.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர், 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழின் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon