மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

தமிழகத்தில் தாவர மையம் அமைக்கும் இஸ்ரேல்!

தமிழகத்தில் தாவர மையம் அமைக்கும் இஸ்ரேல்!

இந்தியா, இஸ்ரேலுடன் இணைந்து தமிழகத்தின் கிருஷ்ணகிரி பகுதியிலுள்ள தாழியில் தாவர வளர்ப்பு மையம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

வேளாண் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முதன்முறையாக இஸ்ரேல் நாட்டின் உதவியோடு இந்தியா அதிகாரபூர்வமாக டிசம்பர் 7ஆம் தேதி இந்தத் தாவர வளர்ப்பு மையத்தைத் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு இஸ்ரேல் நாட்டின் சர்வதேச மேம்பாட்டுக் கூட்டமைப்பின் தலைவர் கில் ஹாஸ்கெல் தலைமை ஏற்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், தமிழ்நாடு வேளாண் அமைச்சர் ஆர்.துரைகண்ணு ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வையடுத்து இந்தோ-இஸ்ரேல் வேளாண் கூட்டணி, திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்றாண்டு ஒப்பந்தத்தின் கீழ் காய்கறி வளர்ப்பு மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குடமிளகாய், வெள்ளரி, தக்காளி ஆகிய காய்கறிகளின் சாகுபடியில் முன்னிலை வகிக்கும் திண்டுக்கல் மாவட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தத் திட்டத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இஸ்ரேல் நாட்டின் சர்வதேச மேம்பாட்டுக் கூட்டமைப்பின் தலைவர் கில் ஹாஸ்கெல் கூறுகையில், “இந்த நிகழ்ச்சிக்குப் பின் இந்தோ-இஸ்ரேல் கூட்டணியில் வேளாண் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு 30 மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். முன்னதாக நாங்கள் ஒன்பது நாடுகளில் 20 மையங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவில் ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய பகுதிகளில் நிறைய மையங்களை அமைக்கவுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon