மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

உயிரைக் கொடுத்தாவது வெற்றிபெற வேண்டும்!

உயிரைக் கொடுத்தாவது வெற்றிபெற வேண்டும்!

ஆர்.கே.நகரில் உயிரைக் கொடுத்தாவது வெற்றி பெற வேண்டும் என்று ஆர்.கே.நகரில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருக்கிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

வரும் டிசம்பர் 21ஆம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதை முன்னிட்டு, நேற்று (டிசம்பர் 6) சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

“வேட்பாளர்கள் சரியான ஆவணங்களைத் தாக்கல் செய்தால், தேர்தல் ஆணையம் வேட்புமனுவை நிராகரிக்காது. நாடு முழுவதும் ஒரே தேர்தல் விதிமுறைதான் பின்பற்றப்படுகிறது. ஆர்.கே.நகருக்கு என்று தனி விதிகளைத் தேர்தல் ஆணையம் பின்பற்றாது” என்று இந்தக் கூட்டத்தில் உரையாற்றினார் எடப்பாடி பழனிசாமி. அவரது பேச்சு, தற்போதைய வேட்புமனுத் தாக்கல் சர்ச்சைகளோடு தொடர்புடையதாக இருந்தது.

அதோடு, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; இந்தியாவே அதை உற்றுப் பார்க்கிறது. அதனால், நாம் உயிரைக் கொடுத்தாவது வெற்றிபெற வேண்டும்” என்று அவர் கட்சி நிர்வாகிகளிடத்தில் கேட்டுக்கொண்டார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு சத்திய சோதனை என்று தெரிவித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். “நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயலாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆர்.கே.நகரில் அதிமுகவுக்கு அதிக ஆதரவு உள்ளது. இங்கு மதுசூதனன் பெறும் வெற்றி வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும்” என்றார்.

இன்று மாலை முதல் ஆர்.கே.நகரில் அதிமுக பரப்புரை மேற்கொள்ளும் என இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon