மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

வாகனக் கட்டுப்பாடு திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்!

வாகனக் கட்டுப்பாடு திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்!

வாகனக் கட்டுப்பாடு திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் டெல்லி அரசு உறுதியளித்துள்ளது.

டெல்லியில் கடந்த மாதம் ஏற்பட்ட காற்று மாசுபாட்டினால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாக்கினர். இதனால் மக்கள் முககவசம் அணிந்துகொண்டு செல்லுமளவுக்குச் சூழல் மாறியது. 200 மீட்டர் தொலைவில் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 4ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் 140 ஆண்டுகளில் இல்லாத வகையில் சர்வதேச அணி ஒன்று மாசைக் கட்டுப்படுத்தும் முக கவசங்களை அணிந்து விளையாடியது இதுவே முதன்முறை. அந்த அளவுக்கு டெல்லியில் காற்று மாசு நிலவுகிறது. காற்று மாசுவைக் குறைக்கும் செயல் திட்டத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் டெல்லி அரசு நேற்று (டிசம்பர் 6) சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், பெண்கள் என யாருக்கும் விலக்கு அளிக்கப்படாமல் வாகன கட்டுப்பாடு திட்டம் மீண்டும் டெல்லியில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் டெல்லியில் காற்று மாசு அதிகம் காணப்பட்டபோது, ஒற்றைப்படை தேதிகளில் ஒற்றைப்படை எண்கள் கொண்ட வாகனங்கள் இயக்கவும், இரட்டைப்படை தேதிகளில் இரட்டைப்படை எண்களில் முடியும் வாகனங்களை இயக்கவும் அனுமதி அளிக்கும் வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்தியது. ஆனால், இந்தத் திட்டத்தில் இருசக்கர வாகனங்களுக்கும் பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. பிறகு வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்தவில்லை. இந்த நிலையில் டெல்லி அரசு தற்போது தீர்ப்பாயத்தின் முடிவுக்கு ஏற்ப வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்த தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. காற்றில் மாசு அளவு மிகவும் அபாய நிலையை எட்டினால், அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்துவதாகவும் உறுதி அளித்துள்ளது. ஆனால், டெல்லி அரசைக் கடுமையாக சாடியுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், மாசு தொடர்பாக இதுவரை ஒரு வழக்கு கூட பதியவில்லை. அரசு வெறுமனே பேச மட்டுமே செய்வதாகவும் கள அளவில் இது பிரதிபலிப்பதில்லை. டெல்லி அரசு அளிக்கும் வாக்குறுதிகளைப் பின்பற்றுவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த திங்கட்கிழமை தேசிய பசுமை தீர்ப்பாயம், காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யாத டெல்லி அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தியதற்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon