மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

ஆஃப்லைன் சேவையில் பேடிஎம்!

ஆஃப்லைன் சேவையில் பேடிஎம்!

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் விரைவில் தனது ஆஃப்லைன் சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

மின்னணு பணப்பரிவர்த்தனையில் முன்னணி நிறுவனமான பேடிஎம், டிசம்பர் 5 முதல் ஏடிஎம் சேவையைத் தொடங்கியது. இந்நிறுவனம் மேலும் ரூ.3000 கோடி முதலீட்டில் அடுத்த மூன்றாண்டுகளில் இந்த ஆஃப்லைன் சேவையை இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் உள்ளூரைச் சேர்ந்த சிறிய கடைகள் வாயிலாக பணம் டெபாசிட், பணம் எடுத்தல் ஆகிய சேவைகள் வழங்கப்படவுள்ளது.

பேடிஎம் நிறுவனம் தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சம் ஏடிஎம் மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்களுக்குக் கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது. மேலும், இதில் புதிதாகக் கணக்குத் தொடங்க வைப்புத் தொகையாக எதுவும் வசூலிப்பதில்லை. அதனால் ஜீரோ பேலன்ஸ் இருந்தால் போதுமானது. இந்தச் சேவையின் முதல்கட்டமாக டெல்லி, கான்பூர், அலகாபாத், வாரணாசி, அலிகார் ஆகிய நகரங்களில் 3000 ஏடிஎம்கள் அமைக்கப்படவுள்ளது.

இந்தச் சேவை குறித்து பேடிஎம் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ரேணு கூறுகையில், “பேடிஎம்மின் இந்த ஏடிஎம் சேவை மூலம் நாட்டிலுள்ள அனைவரும் வங்கிக் கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். இதில் வாடிக்கையாளர் அவர்களுக்கு அருகிலுள்ள மிகவும் நம்பத்தக்க கடைகளுக்குச் சென்று ஆதார் எண்ணை இணைத்து வங்கிக் கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். இதன்மூலம் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள ஏராளமான மக்களுக்குத் தரமான வங்கிச் சேவை சென்றடையும் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon