மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

ராமர் கோயில்: காங்கிரஸின் நிலை?

ராமர் கோயில்: காங்கிரஸின் நிலை?

‘இரட்டை வேடம் போடுவதைவிட்டு, ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு என்னவென்பதை ராகுல் விளக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார் பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா.

உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணையில், கடந்த டிசம்பர் 5ஆம் தேதியன்று சன்னி வக்பு வாரியம் சார்பாக ஆஜரானார் கபில்சிபல். அப்போது, இந்த வழக்கு விசாரணையை வரும் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டுமென்று கோரினார்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வழக்கு விசாரணை தொடர்வது, அரசியல் மற்றும் சமூகத்தில் சில பிரச்னைகள் முளைக்க வழிவகுக்கும் என்று கூறியிருந்தார். அதன்பின் இந்த வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்க மாட்டோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

அகமதாபாதில் நேற்று முன்தினம் (டிசம்பர் 5) பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார் பாஜக தலைவர் அமித் ஷா. அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் கபில்சிபலின் கருத்துக்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். “குஜராத் தேர்தலுக்காக கோவில்களுக்கு சுற்றுலா செல்கிறார் ராகுல்; இன்னொருபக்கம் இந்த வழக்கின் விசாரணையை தள்ளிப்போடச் சொல்லிக் கேட்கிறார்கள். ஏன் இந்த இரட்டை வேடம்?” என்று விமர்சித்தார்.

“அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதைத் தீவிரமாக எதிர்க்கிறார் கபில்சிபல். அதனால், ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு என்னவென்பதை ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும். நீதி மன்றத்தில் கபில்சிபல் சொன்னதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறதா? அதுதான் காங்கிரஸின் கருத்தா?” என்று அவர் கேள்வி எழுப்பினார் அமித் ஷா.

“2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நஷ்டம் ஏதுமில்லை என்றும், குஜராத்தில் பட்டேல்களுக்கான இட ஒதுக்கீடு சாத்தியம் என்றும் சொன்னவர் கபில்சிபல். ஏதாவது வித்தியாசமாகச் சொல்ல வேண்டுமென்றால், கபில்சிபலை பேச வைக்கிறது காங்கிரஸ்” என்று குற்றம் சாட்டினார்.

கண்டிப்பாக, இதற்கும் முறைவைத்து பதில் சொல்வார் ராகுல். ஏனென்றால், குஜராத் தேர்தலை முன்வைத்து கடந்த சில நாள்களாக பாஜக – காங்கிரஸ் இடையே இப்படிப்பட்ட வார்த்தைப் போர்தான் நடந்துகொண்டிருக்கிறது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon