மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

சிறப்புக் கட்டுரை: பெண்கள் தொடங்கிய பெண்களுக்கான வங்கி!

சிறப்புக் கட்டுரை: பெண்கள் தொடங்கிய பெண்களுக்கான வங்கி!

தருண் காந்தி போஸ்

சத்தீஸ்கரின், பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற ஏழை, எளிய பெண்களின் சமூகப் பொருளாதார விடுதலைக்கு வித்திட்டிருக்கிறது சக்தி மஹிலா வங்கி. அரசு நடத்திவரும் பொதுத் துறை நிறுவனங்களே இயங்க முடியாமல் தடுமாறிவரும் சூழலில், சிறு முதலீட்டில் பெண்கள் தொடங்கி சிறப்பாக நடத்திவரும் இந்த வங்கி, அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. ஏழைப் பெண்களுடைய, சுயஉதவிக் குழுக்களின் சீரிய முயற்சியால், கிராமப்புறங்களில் நிலவும் சாதியக் கட்டுப்பாடுகளைத் தகர்த்து அவர்களின் விடுதலைக்கு வழி வகுத்திருக்கிறது இந்த வங்கி. மேலும், கடந்த 14 வருடங்களாக கிராமப்புற பெண்களின் சமூக விடுதலைக்காகச் சத்தமில்லாமல் போராடி வருகிறது. சமூக மாற்றத்துக்கு வித்திட்ட இந்த வங்கி குறித்தும், இதனால் பயனடைந்தவர்கள் குறித்தும் விரிவான களத் தகவல்களுடன் டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் தருண் காந்தி போஸ் எழுதிய கட்டுரை வில்லேஜ் ஸ்கொயரில் டிசம்பர் 4 அன்று வெளியாகியுள்ளது. அதன் தமிழாக்கம் இங்கே...

சக்தி கடன் கூட்டுறவுச் சங்கம் 2003ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. சேமிக்கவும், ஈட்டவும், கொடுக்கவும் எளிமையான விதிகளைக்கொண்டு உருவாக்கப்பட்டது இந்த வங்கி. சக்தி மஹிலா வங்கியைப் பற்றி பெரும்பாலும் பலரால் அறியப்பட்டுள்ளது என்னவென்றால், அது கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் நிறுவனமாகும். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்த வங்கியில் கடன் வாங்கப் பெண்களுக்கு எந்தச் சொத்தும் இருக்க வேண்டிய கட்டாயமில்லை.

சேமிப்புத் திட்டத்தின்படி தாங்கள் சம்பாதித்து சேமித்த தொகையிலிருந்து கடன் வாங்கி வேளாண் உபகரணங்கள் மற்றும் கால்நடைகளைப் பெண்கள் வாங்கிக் கொள்கின்றனர். இது அவர்களின் வருவாயை அதிகரிக்க வழிவகுக்கிறது. இந்த வங்கி அவர்களுக்குப் பொருளாதார வளர்ச்சியை அளிக்கும் விதமான பணியை மட்டும் மேற்கொள்ளவில்லை. அவர்களை உள்ளாட்சித் தேர்தல்களில் நிற்கவைத்து மக்களுக்குச் சேவை செய்யவும் ஊக்குவிக்கிறது.

கிராமப்புற பெண்களின் மீது இப்படியொரு அக்கறையோடு செயல்படும் இந்த சக்தி மஹிலா வங்கியை உருவாக்கியவர் ஹேம்லதா சாஹு ஆவார். இதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இவரே செயல்படுகிறார். சக்தி மஹிலா வங்கி மட்டுமின்றி மஹிலா சிக்ஸா கல்யாண் எவம் பிரஷிக்சான் பரிஷாத் அமைப்பின் தலைமை நிர்வாகியாகவும் இவர் செயல்படுகிறார். இது ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும்.

கிராமப்புற சத்தீஸ்கரைப் பொறுத்தவரையில் அது ஓர் ஆணாதிக்க சமூகமாகும். வீடுகளில் உணவு தானியப் பொருள்களைத்தான் பெண்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். “அவர்களுடைய அன்றாட உணவுக்கான அரிசியிலிருந்து ஒருபிடி அரிசியை எடுத்துச் சேமித்து வைக்க நாங்கள் கேட்டுக்கொண்டோம். இது அந்த படிக்காத கிராமப்புற பெண்களிடம் சேமிப்பு பற்றிய புதிய கலாசாரத்தை ஏற்படுத்தியது” என்கிறார் ஹேம்லதா. பிறகு இதைப் படிப்படியாக 23 கிராமங்களுக்கு விரிவுபடுத்தினார்கள். இதன் முடிவு மக்களைச் சேமிப்பு நோக்கி ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது. இது ஒருவகையில் சுரண்டலில் இருந்து கிராமப்புற ஏழைப் பெண்களை விடுவித்தது. இதனால் சேமிப்பின் அவசியத்தைக் கிராம மக்கள் உணர்ந்தார்கள்.

இதையடுத்து, மாதத்துக்கு 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் சேமிக்கத் தொடங்கி சேமிப்புத் திட்டத்தை விரிவாக்கினார்கள். இதன்மூலம் ஒன்றுசேர்ந்து ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாகக் கூடி சுயஉதவிக் குழுக்களாக செயல்படத் தொடங்கினர். பின்னர் இவர்களுக்கு வங்கிகளில் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், இந்தக் கிராமப்புற ஏழை மக்கள் வங்கிக்குச் சென்றபோது, வங்கி அதிகாரிகள் ஒருவித விரோத மனப்போக்கைக் கையாள்வதாக உணர்ந்தனர். இதனால் அங்கிருந்து திரும்பி, இவர்களுடைய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் சுயமாக ஒரு வங்கி தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

“இந்தப் பெண்களின் கோரிக்கையை அடுத்து சக்தி மஹிலா வங்கியைத் தொடங்கினோம்” என்கிறார் ஹேம்லதா. இன்று பிலாஸ்பூர் மாவட்டத்தில் சக்தி மஹிலா வங்கிதான் மற்ற எல்லோருக்கும் முன்னுதாரணமாக உள்ளது. இந்த வங்கியில் தற்போது 64 சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த 9,088 பெண்கள் கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் சேமித்து வைத்துள்ள டெபாசிட் தொகையின் மதிப்பு 29.80 மில்லியன் ரூபாயாகும். (1 மில்லியன் = 10 லட்சம்) தற்போது மத்திய இந்தியாவின் மிகப்பெரிய பெண்கள் வங்கியாகச் சக்தி மஹிலா வங்கி உருவெடுத்திருக்கிறது.

அங்குள்ள கோனி கிராமத்தில் 2,000 பேர் வசிக்கின்றனர். ஆனால், இவர்களுக்குப் போதிய வேலைவாய்ப்பின்றி, வாழ்வாதாரத்துக்கான நிலையான வழியில்லாமல் சிரமப்படுகின்றனர். நிலவுடமையாளர்களும் கூட இங்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு விவசாயத்தைச் சார்ந்திருந்த பெரும்பாலான தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வேலை தேடி அண்டை மாநிலங்களுக்குக் குடி பெயர்ந்துவிட்டனர். இவர்களில் சிலர் உத்தரப்பிரதேசத்தின், அலகாபாத் மாவட்டத்துக்குச் செங்கல் உலைகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு சென்றுவிட்டனர். சிலர் குஜராத்தின், சூரத் ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு வேலைக்குச் சென்றுவிட்டனர். சிலர் மகாராஷ்டிராவுக்குத் தினக்கூலிகளாகச் சென்றுவிட்டனர்.

சக்தி மஹிலா வங்கி கோனி கிராமத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. கூடுதலாக அந்தக் கிராமத்தின் மற்ற மேம்பாடுகளுக்கும் இந்த வங்கி உதவியிருக்கிறது. குறிப்பாக மலைகளில் இருந்து நீர் வழிந்தோடும்போது, ஏற்படும் மண் அரிப்பைத் தடுக்க இந்த வங்கி உதவி புரிந்துள்ளது. அதுமட்டுமன்றி, “கடந்த 14 வருடங்களாகக் கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு சிறுகடன் உதவியும் புரிந்து வருகிறோம்” என்கிறார் ஹேம்லதா.

“முன்பெல்லாம் நாங்கள் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களிடம்தான் கடன் பெற்று வந்தோம். அவர்கள் எங்களிடம் அதிக வட்டியை வசூலித்து வந்தனர்” என்று கோனியைச் 52 வயதான கசுல்யா சாஹு கூறுகிறார். “ஆனால், 2007ஆம் ஆண்டில் நான் சக்தி மஹிலா வங்கியின் உறுப்பினரானேன். அதன்பின்னர் என் வாழ்க்கையே மாறிவிட்டது. நான் முதன்முதலாக ரூ.20 சேமிப்புத் திட்டத்தில் இணைந்து ரூ.10,000 கடன் வாங்கினேன். அந்தக் கடன் தொகையைக்கொண்டு ஏற்கெனவே வெளியில் கடன் வாங்கியதற்காக அடமானம் வைத்திருந்த என்னுடைய 2 ஏக்கர் நிலத்தை மீட்டெடுத்தேன். இந்தப் பத்தாயிரத்தைச் செலுத்திய பின்னர் போர்வெல் அமைக்க மீண்டும் வாங்கினேன். ஆறு வருடங்களுக்குள் ஐந்து முறை சக்தி மஹிலா வங்கியில் கடன் வாங்கி கால்நடைகள், கிரைண்டர் இயந்திரங்கள் எனப் பலவற்றை வாங்கினேன். கடனையும் திருப்பி செலுத்திவிட்டேன்” என்கிறார் மகிழ்வோடு.

அதேபோல, 36 வயதான அஞ்சலி ஜெய்ஸ்வால், அகமதாபாத்தில் நடந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்குச் செல்லவும் இந்த வங்கி உதவி செய்திருக்கிறது. மேலும், இவருடைய கணவரின் சிறிய அளவிலான மளிகைக் கடைக்கு ரூ.30 ஆயிரம் சக்தி மஹிலா வங்கி கடன் வழங்கியுள்ளது. “இந்தக் கடனுதவி வியாபாரத்தை இயக்கப் பெரிதும் உதவியது. நானும் தினசரி கடைக்குச் சென்றேன். இதைக் கட்டி முடித்த பின்னர் மேலும் 50 ஆயிரம் ரூபாய் மீண்டும் வாங்கி, கடையை விரிவுபடுத்தினோம்” என்றார் அஞ்சலி.

“பல நூற்றாண்டுகளாகவே எங்கள் கிராமப் பெண்கள் ஒரு துறவு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்தார்கள். பர்தா அணிந்துதான் வெளியில் வருவோம். ஆண்களுடன் பொதுவெளியைப் பகிர்ந்து கொள்ளவே பெண்கள் பெரிதும் தயங்கினர்” என்று இதுநாள் வரையிலும் தாங்கள் எப்படி வாழ்ந்து வந்தோம் என்று விவரித்தார் கசுல்யா சாஹு. “அது எங்களுடைய பொருளாதார சுதந்திரத்துடன் சேர்ந்து மாறியது” என்று கூறும் கசுல்யா, “சக்தி மஹிலா வங்கி எங்களுக்கு எப்படிச் சேமிக்க வேண்டும் என்று காட்டியது. பொருளாதார விடுதலையை மட்டும் எங்களுக்கு இந்த வங்கி அளிக்கவில்லை, எங்களை அதிகாரமிக்கவர்களாகவும் உருவாக்கியது” என்கிறார். இவர் தற்போது பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார். மேலும், வார்டு அபிவிருத்தி திட்டத்தின் தலைவராகப் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை அவருடைய கிராம பஞ்சாயத்தில் பொறுப்புடன் செய்து வருகிறார்.

ஜெய்ஸ்வாலும்கூட தற்போது சர்பன்ச் பகுதியில் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் தனது கணவரை எதிர்த்துக்கொண்டு, இவருடைய குழுவைச் சேர்ந்த மற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்களுடன் இணைந்து தினசரி கூட்டம் நடத்தி மேம்பாட்டுப் பணிகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். அதுபற்றி அவர் கூறுகையில், “எங்கள் கோனி கிராமத்தில் பெண்களின் ஒற்றுமையும், பார்வையும் விரிவடைந்துள்ளது. தொடக்கத்தில் நாங்கள் எங்குச் சென்றாலும் எங்களுடன் ஆண் உறுப்பினர்களும் உடன் வருவார்கள். இப்போது, நாங்களே சுயாதீனமாகச் சிந்தித்துச் செயல்படுகிறோம். அவர்களின் உதவித் தேவைப்படுவதில்லை” என்றார் பெருமிதமாக. இப்போது கோனி பஞ்சாயத்து நாடு முழுவதிலும் இருப்போர் கற்றுக்கொள்ளும் வகையில் ஒரு முன்மாதிரி கிராமப் பஞ்சாயத்தாக விளங்குகிறது.

ஓர் ஒற்றைச் சதுர கட்டி உணவைக்கொண்டு ஒரு நாளையே கடத்தியதாக நினைவுகூர்கிறார் 42 வயதான சுமித்ரா மெகர். அவர் வாழ்க்கையிலும் சக்தி மஹிலா வங்கி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனைப் பற்றி அவர் விவரிக்கையில், “எங்கள் குடும்பம் மாட்டுத் தோலை எடுத்து விற்பனை செய்யும் பணியைச் செய்து வந்தது. அதன்பிறகு சக்தி மஹிலா வங்கியில் ரூ.10,000 கடன்பெற்று தோல்களைக் கொண்டு காலணிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டோம். தற்போது என் கணவர் காலணிகள் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். நான் சமூக சுகாதாரத் தொண்டராக (மிடானின்) பணியாற்றுகிறேன். மருத்துவச்சியாகவும் பயிற்சி பெற்றுள்ளேன். ஒரு பிரசவத்துக்கு ரூ.700 பெறுகிறேன். மேலும், வருடத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் எனக்குக் கிடைக்கும்” என்றார்.

ராணு கார்கே பக்கத்து கிராமமான லாவரிலிருந்து வருகிறார். இந்தக் கிராமம் ஆர்பா நதிக்கரைக்கு அருகில் உள்ளது. இது மகாநதியின் முக்கிய துணை நதியாகும். இந்த ஆர்பா நதியின் தண்ணீரைக் கொண்டு காய்கறிகள் விவசாயம் மேற்கொண்டிருந்தார் கார்கே. ஆனால், என்றைக்கு அந்த நதிக்கரையில் காகிதத் தொழிற்சாலை தொடங்கப்பட்டதோ அன்றைக்கே தண்ணீர் மாசடைந்து விவசாயம் பாழ்பட்டுவிட்டது என்றார். “அதற்குப் பிறகு நாங்கள் சுயஉதவிக் குழுவை அமைத்தோம். அந்தக் குழுவின் மூலம் 2 ரூபாய் சிறுசேமிப்பு திட்டத்தைத் தொடங்கினோம். பிறகு வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு வங்கிக்குச் சென்றோம். ஆனால், வங்கி அதற்கு மறுத்துவிட்டது. நாங்கள் எங்கள் குழுவில் இருந்த 20 பேருடன் சக்தி மஹிலா வங்கியில் இணைந்தோம். தற்போது மிடானின் உறுப்பினராக உள்ளேன். நான் ஒரு தலித். எனக்கு என்னுடைய குழுவும், சக்தி மஹிலா வங்கியும் உதவி செய்தது. இப்போதெல்லாம் எங்கள் ஊருக்கு அரசு அதிகாரிகள் ஏதேனும் பணியாக வந்தால் என்னிடம் கலந்து ஆலோசிப்பார்கள்” என்கிறார் கார்கே. இவர் ஒரு வருடம் சக்தி மஹிலா வங்கியின் இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

பெண்களின் இந்த சுயஉதவிக் குழுக்கள் அல்லது தனி நபர்கள் சக்தி மஹிலா வங்கியின் மூலம் பெற்ற கடன் தொகை வேண்டுமானால் குறைந்த அளவில் இருக்கலாம். இதுபோன்ற சிறு கடன்கள் பெறுவதும் இயற்கையான ஒன்றே. ஆனால், இந்த சிறு கடன்கள் அந்த ஏழை மக்களின் வறுமைக்கு எதிரான போராட்டத்துக்கு உதவியிருக்கிறது. இந்தக் கடன் தொகையை அவர்கள் திருப்பி செலுத்தும் முறை எளிமையாகவும், குறைந்த தொகையிலும் இருக்கும் வகையில் சக்தி மஹிலா வங்கியின் விதிகள் அமைந்துள்ளது.

பொருளாதார தளத்தில் அடித்தட்டில் இருக்கும் பெண்கள் சக்தி மஹிலா வங்கியில் கடன்பெற்று மிகவும் நேர்மையான முறையில் செலுத்துகின்றனர். அவ்வாறு பெற்ற கடனைக் கொண்டு ஏதேனும் தொழில் தொடங்கி இயங்குகின்றனர். பெற்ற கடனை திருப்பிச் செலுத்திய பின்னர் தொழிலை விரிவுபடுத்தக் கூடுதல் தொகையை மேலும் கடனாகப் பெற்று தொழிலில் லாபமீட்டுகின்றனர். அதற்குப் பிறகு அவர்களுக்குக் கடன் தேவைப்படுவதே இல்லை.

படங்கள்: ஜெகதீஷ் யாதவ் (வில்லேஜ் ஸ்கொயர்)

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon