மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

பாரா மெடிக்கல் கல்லூரிக்கு ‘சீல்’ வைப்பு!

பாரா மெடிக்கல் கல்லூரிக்கு ‘சீல்’ வைப்பு!

போலி டாக்டர் நடத்திவந்த பாரா மெடிக்கல் கல்லூரிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மேலவீதி பெரிய கோயில் அருகில் தனியார் பாரா மெடிக்கல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியை நடத்திவரும் கோட்டூரைச் சேர்ந்த எழில்மோகன் (வயது 45) என்பவர் மருத்துவம் படிக்காமல் ஹோமியோபதி முறையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதாகத் திருவாரூர் மாவட்டச் சுகாதாரத் துறை இணை இயக்குநருக்குப் புகார் வந்தது.

இந்தப் புகாரின்பேரில் திருவாரூர் மாவட்டச் சுகாதாரத் துறை இணை இயக்குநர் செந்தில்குமார், மருத்துவ அலுவலர் பால தண்டாயுதம், திருத்துறைப்பூண்டி தாசில்தார் மகேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த பத்மநாதன் ஆகியோர் நேற்று முன்தினம் (டிசம்பர் 5) பாரா மெடிக்கல் கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

இதில் பாரா மெடிக்கல் கல்லூரி நடத்த எந்த அனுமதி பெறாமலும், உரிய மருத்துவம் படிக்காமல் எழில்மோகன் ஹோமியோபதி சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பாரா மெடிக்கல் கல்லூரிக்குச் சுகாதாரத் துறை இணை இயக்குநர் செந்தில்குமார் சீல் வைத்தார்.

மேலும், போலி டாக்டர் எழில்மோகன் மீது திருத்துறைப்பூண்டி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து எழில்மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon