மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

உலக அளவில் தாஜ்மஹால் பெற்ற இடம்?

உலக அளவில் தாஜ்மஹால்  பெற்ற இடம்?

‘யுனெஸ்கோ’ உலக பாரம்பர்ய இடங்களுக்கான பட்டியலில் இந்தியாவில் உள்ள தாஜ்மஹாலுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

ஆன்லைனில் உலகளவில் யுனெஸ்கோ கலாசார மற்றும் இயற்கை பாரம்பர்ய இடங்கள் குறித்த கருத்துக்கணிப்பு ஒன்றைத் தனியார் நிறுவனம் நடத்தியது. அதில் இந்தியாவைச் சேர்ந்த தாஜ்மஹால் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

தாஜ்மஹால் இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ்பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ்மஹாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக்கட்டடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக்கொண்டு 1631 முதல் 1654ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டி முடிக்கப்பட்டது.

முதலிடத்தை கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர்வாட் கோயில் பிடித்துள்ளது. மேலும், இந்தப் பட்டியலில் சீன பெருஞ்சுவர், பிரேசிலில் உள்ள இஹாஷு தேசிய பூங்கா உள்ளிட்ட பல இடங்கள் இடம் பெற்றுள்ளது.

மேலும், இந்திய அரசின் புள்ளிவிவரப்படி இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளில் நான்கில் ஒருவர் தாஜ்மஹாலை பார்வையிடுவதாகவும், அதேநேரத்தில் மற்ற உலக அதிசய தளங்களை ஒப்பிடும்போது தாஜ்மஹாலுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தாஜ்மஹாலுக்கு ஆண்டுக்குச் சராசரியாக 80 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon