மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

லோக் ஆயுக்தாவை நிறைவேற்ற வேண்டும்!

லோக் ஆயுக்தாவை நிறைவேற்ற வேண்டும்!

ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தாவை, சேவை உரிமை மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நேற்று (டிசம்பர் 6) ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசுத் துறைகளில் ஊழலும், கையூட்டும் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஊழல் அதிகாரிகளை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கூடாது என்று வினா எழுப்பியிருக்கிறது. அரசுத் துறைகளில் நிலவும் ஊழல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் நீதிமன்றங்களில் எந்த அளவுக்கு கொந்தளிப்பு நிலவுகிறது என்பதையே இந்த வினா காட்டுகிறது.

நேர்மையான அதிகாரிகள் பாராட்டி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதைப் போலவே, தவறு செய்யும் அதிகாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஊழல் செய்யும் அதிகாரிகளைத் தண்டிப்பதற்கு முன் அதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஆனால், ஊழல் ஒழிந்து விடக் கூடாது என்று நினைக்கும் தமிழகத்தின் இரு திராவிடக் கட்சிகளும் இதற்குக் தடையாக உள்ளன. லோக் ஆயுக்தா அமைப்பு 1971ஆம் ஆண்டு முதல் 47 ஆண்டுகளாகவும், பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் 2010ஆம் ஆண்டு முதல் எட்டு ஆண்டுகளாகவும் பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன. இந்த இரு சட்டங்களையும் தமிழகத்திலும் கொண்டுவர வேண்டும் என்று கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும்போதிலும், அதை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. காரணம்... ஊழலை ஒழிப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லை.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 20 மாதங்களாகியும் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறை தமிழக ஆட்சியாளர்களுக்கு இருந்தால் லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவையும், பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வடிவையும் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon