மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

கலப்புத் திருமணம் நிதியுதவி திட்டத்தில் மாற்றம்!

கலப்புத் திருமணம் நிதியுதவி திட்டத்தில் மாற்றம்!

மத்திய அரசு தலித் கலப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியருக்குச் சுமார் ரூ.2.5 லட்ச நிதி உதவி வழங்கும் திட்டத்தில் மாற்றம் செய்துள்ளது.

2013ஆம் ஆண்டு ‘அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண திட்டம்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட திட்டத்தில் சில வரைமுறைகள் இருந்தன. கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களில் ஒருவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருக்கக் கூடாது. திருமணம் செய்துகொண்ட ஓராண்டுக்குள் இந்து திருமணச் சட்டத்தின்கீழ் பதிவு செய்திருக்க வேண்டும் உள்ளிட்ட வரம்புகள் இருந்தன.

தற்போது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் இந்த வரம்புகளை நீக்கியுள்ளது. அதேநேரத்தில் ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற திட்டங்கள் பல மாநிலங்களில் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், அதற்கு வருமான வரம்பு இல்லை. எனவே, மத்திய அரசும் அதை நீக்க முடிவு செய்தது. இந்த உதவித் தொகை புதிதாகத் திருமணமானவர்கள் தங்களது ஆரம்பக்கால திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்கு வசதியாக இருக்கும் என அமைச்சகம் தெரிவித்தது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon