மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

ஒகி புயல்: காவலரின் சேவைக்குக் குவியும் பாராட்டுகள்!

ஒகி புயல்: காவலரின் சேவைக்குக் குவியும் பாராட்டுகள்!

கேரளா கொச்சி அருகேயுள்ள கண்ணமாலி என்ற பகுதியில் ஒகி புயல் கடுமையாகத் தாக்கியது. அப்போது தலைமைக் காவலர் ஆன்ட்ரூஸ் மீட்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஒரு பகுதியில் வீட்டைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்திருக்க, 75 வயது முதியவரான ஆண்டனி என்பவர், வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். முதியவர் அபாயக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, அந்த வீட்டுக்குச் சென்ற ஆன்ட்ரூஸ், அவரைத் தோளில் சுமந்து சென்று காப்பாற்றினார்.

முதியவரை மீட்க ஆன்ட்ரூஸ் எடுத்த முயற்சியை வீடியோவாக எடுத்த ஒருவர், அதை சமூக வலைதளங்களில் பதிவிட, அந்த வீடியோ வைரலானது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும்கூட ஆன்ட்ரூஸுக்குப் பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், போனில் தொடர்புகொண்டு, அவரின் செயலைப் பாராட்டி வருகின்றனர். கொச்சி நகர காவல் ஆணையர் தினேஷ் அவருக்குப் பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து ஆன்ட்ரூஸ் கூறுகையில், “புயல் நேரத்தில் சூழல் மிகவும் மோசமாக இருந்தது. மக்களை மீட்டதற்காக நான் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை. அந்த வீடியோ வைரலானதையடுத்து ஏராளமானோர் என்னைத் தொடர்புகொண்டு பாராட்டுகின்றனர். அதையே, பெருமையாகக் கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon