மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

தோனிக்காகக் காத்திருக்கும் சென்னை ரசிகர்கள்!

தோனிக்காகக் காத்திருக்கும் சென்னை ரசிகர்கள்!

இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்டுவந்த மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அவரை மீண்டும் கேப்டனாக பார்க்கும் வாய்ப்பு ஐ.பி.எல் தொடரின் மூலம் நடைபெறும் என்பதாலும், கடந்த இரண்டாண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ள சென்னை அணி மீண்டும் அடுத்த வருடம் களமிறங்க உள்ளது என்பதாலும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 2015ஆம் ஆண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளை இரண்டாண்டுகள் ஐ.பி.எல் தொடரில் விளையாடத் தடை விதித்தது சுப்ரீம் கோர்டு. இதனால், அந்த அணியில் உள்ள வீரர்கள் குஜராத் மற்றும் புனே என இரண்டு புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதில் விளையாடி வந்தனர். இந்த ஆண்டுடன் தடைக்காலம் முடிவடைந்த நிலையில், சென்னை அணிக்கு பழையபடி தோனி தலைமையில் திரும்ப முடியுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், ஐ.பி.எல் குழு நேற்று (டிசம்பர் 6) நடைபெற்றது.

அதில் வீரர்களைத் தக்கவைத்துக் கொள்வது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி ஒவ்வோர் அணிகளும் ஐந்து முன்னணி வீரர்களை தக்கவைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்துக்கு அனுப்பலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னை, ராஜஸ்தான் அணிகளைப் பொறுத்தவரை புனே மற்றும் குஜராத் அணிகளுக்காக விளையாடிய வீரர்களில் மூன்று பேரை (ஒரு உள்நாட்டு வீரர், 2 வெளிநாட்டு வீரர்கள்) தக்கவைத்துக் கொள்ளலாம்.

எனவே, தோனி சென்னை அணிக்கு திரும்புவதில் தடை ஏதும் இல்லை என தெளிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஒவ்வோர் அணி ஏலத்துக்காகச் செலவிடும் தொகை 66 கோடி ரூபாயிலிருந்து 80 கோடியாக உயர்த்தியும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு நடக்க உள்ள ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. சென்னை அணி தோனியை நிச்சயம் தக்கவைத்துக் கொள்ளும் என சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆனால், மற்ற வீரர்கள் யார் யார் மீண்டும் சென்னை அணிக்குத் திரும்புவார்கள் என ஏலம் நடைபெறும்போது தெரியவரும்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon