மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

11 மாநிலங்களுக்கு அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்!

11 மாநிலங்களுக்கு அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்!

கைவிடப்பட்ட விதவைகளின் நலன் மற்றும் மறுவாழ்வுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காத 11 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

கைவிடப்பட்ட விதவைகளின் மறுவாழ்வு மற்றும் அவர்களின் மறுமணத்துக்குச் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க சமூக அக்கறையுள்ளவர்கள், வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழு அளித்த அறிக்கையில் தமிழகம் உட்படப் பல மாநிலங்களில் விதவைகள் மறுவாழ்வுக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, விதவைகளின் நலன் மற்றும் மறுவாழ்வுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காத உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, குஜராத், மிசோரம், அசாம், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாவட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தது.

விதவைகளின் பரிதாபகரமான நிலையை உயர்த்தக் கோரி 2007ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நாட்டில் உள்ள விதவைகளின் நிலையை மேம்படுத்துவதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்காத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தேசிய பெண்கள் ஆணையத்தால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் குறித்து கலந்து ஆலோசிக்க ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக்கொண்டது. அந்தக் கூட்டத்தில் விதவைகளின் நிலையை மேம்படுத்துவதற்கான கொள்கைகளும் வகுக்கப்பட்டன.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon