மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

கார் உரிமையாளர்களுக்கு எல்பிஜி மானியம் ரத்து!

கார் உரிமையாளர்களுக்கு எல்பிஜி மானியம் ரத்து!

சமையல் எரிவாயு மானியம் பெறும் பட்டியலிலிருந்து கார் உரிமையாளர்களை நீக்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மக்களுக்கு நேரடியாகச் சமையல் எரிவாயு மானியம் வழங்கும் திட்டத்தின் மூலம் 36 மில்லியன் போலி எல்பிஜி இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு, நீக்கியதன் மூலம் அரசு 30,000 கோடி ரூபாயைச் சேமிக்க முடிந்தது. கடந்த ஆண்டு, ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் மற்றும் சந்தை விலையின்படி சிலிண்டர் வாங்க முடிந்தவர்கள், மானியத்தை வேண்டாம் என்று சொல்ல கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், கார் உரிமையாளர்களுக்கு மானியத்தை ரத்து செய்யும் திட்டத்தில் அரசு உள்ளது. முதற்கட்டமாக, பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களிடமிருந்து கார் வைத்திருக்கும் உரிமையாளர்கள் குறித்த விவரங்களை அரசு சேகரித்து வருகிறது. அதை வைத்து, அவர்களுக்கு இந்த மானிய விலையில் இருந்து விலக்கு அளிக்க முடியுமா என்பதைப் பார்க்க இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

பல கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் பெறும் சமையல் எரியாயு மானியம் மூலம் ஒரு பெரிய தொகையை சேமிக்க முடியும் என்று அரசு நினைக்கிறது. நவம்பர் மாதம் வரை இந்தியாவில் 251.1 மில்லியன் உள்நாட்டுச் சமையல் எரிவாயு நுகர்வோர்கள் உள்ளனர். இதில், 121.2 மில்லியன் பேர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எல்பிஜியையும், 64 மில்லியன் பேர் பாரத் பெட்ரோலியம் எல்பிஜியையும், 65.9 மில்லியன் பேர் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எல்பிஜியையும் பயன்படுத்துகின்றனர். ‘பிரதான் மந்திரி உஜ்ஜவாலா யோஜனா’ திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள 31.6 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு எல்பிஜி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon