மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

தீரன் பட பாணியில் கொள்ளை!

தீரன் பட பாணியில் கொள்ளை!

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இதில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், அவை இதுவரை உறுதிப்படுத்த முடியாத தகவல்களாக மட்டுமே இருந்து வந்தன.

இந்த நிலையில், புன்னைநல்லூர் ஞானம் நகரைச் சேர்ந்த சண்முகம் என்பவர் வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் நடத்திய தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் இப்பகுதி மக்களை தற்போது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தீரன் படத்தில் கொள்ளையர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் போன்று அதே பாணியில் கொள்ளையடித்துள்ளனர். அதிகாலையில் சண்முகத்தின் வீட்டு வாசல் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு, இவரின் மகன் விநாயகம் கதவைத் திறந்துள்ளார். கைகளில் கத்தியுடன் முகமூடி அணிந்த ஐந்து பேர் நின்றுள்ளார்கள். அதிர்ச்சி அடைந்த விநாயகம் அலறியிருக்கிறார். இவரது அலறல் சத்தத்தைக் கேட்டு, சண்முகமும் இவரின் மனைவியும் ஓடி வந்துள்ளார்கள். சண்முகத்தைக் கத்தியால் குத்திய கொள்ளையர்கள், அவரின் மனைவி அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து ஓடமுயன்றனர். பொதுமக்கள் அவர்களை விரட்டிச் செல்லும்போது, ஐந்து கொள்ளையர்கள் சமுத்திரம் ஏரியில் குதித்து தப்பிக்க முயன்றுள்ளார்கள். ஏரியைப் பொதுமக்கள் சுற்றி வளைத்து தேடியதில் இரண்டு பேர் மட்டும் மாட்டிக் கொண்டனர்.

பொதுமக்கள் அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், முகமூடி கொள்ளையர்கள் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து தஞ்சையில் பல இடங்களில் உலவுவதாகத் தகவல் வந்துள்ளது. இதனால் தஞ்சை மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon